மத்தியப் பிரேதசத்தின் சாகர் மாவட்டத்தில் ஹர்தவுல் பாபா கோயிலில் மத நிகழ்ச்சி நடந்த அதேவேளையில், வீட்டின் சுவர் இடிந்துவிழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஹர்தவுல் பாபா கோயிலில் மத நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது, DJ பாடல்கள் அளவுக்கதிகமான சத்தத்தில் இசைக்கப்பட்டது.
அந்த சமயத்தில், முலு படேல் என்பவருக்குச் சொந்தமான 50 ஆண்டுகள் பழைய மற்றும் மூங்கிலால் முட்டுக்கொடுக்கப்பட்டு வைத்திருந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே கனமழையில் சேதமடைந்த இந்தச் சுவர் அருகில் மண் சிலைகள் செய்து விளையாடிக்கொண்டிருந்த 10 குழந்தைகள் மீது விழுந்தது.
8 முதல் 15 வயதுடைய இந்த சிறார்களில் ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்பிழைத்தது. மற்ற ஒன்பது குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. அளவுக்கதிகமான சத்தத்தால் ஒலிக்கப்பட்ட DJ இசையின் காரணமாகவே சுவர் இடிந்து விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். பின்னர், இது பற்றியறிந்த முதல்வர் மோகன் யாதவ், இந்த சோக சம்பவம் தனக்கு வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இன்னொருபக்கம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தவிர்த்து உள்ளூர் அதிகாரிகள்மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. குறிப்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் மூன்று பேரைக் கைதுசெய்திருக்கும் போலீஸ், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.