4 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக் வின்னர் சுசாகியை வீழ்த்திய வினேஷ் போகத்..!

Vinesh Phogat, Paris Olympics News : பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற ரவுண்டு 16 போட்டியில் அவர் ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி நொடிக்கு முன் வெற்றியை உறுதி செய்தார் வினேஷ் போகத். 50 கிலோ எடைப்பிரிவில் உலகின் நம்பர் ஒன் பிளேயரான சுசாகி, 4 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதகத்தையும் வென்றுள்ளார். அவரை வீழ்த்துவது மிகவும் சவாலான விஷயம் என்றே இப்போட்டிக்கு முன்பு எல்லோரும் கூறினர். 

இந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பதக்கத்துக்கான வாய்ப்பு ஒருபடி நெருக்கிவிடலாம் என்ற கனவுடன் வினேஷ் போகத் களமிறங்கினார். முதல்  பாதியில் சுசாகியே ஒரு புள்ளி பெற்று முன்னிலை வகித்தார். வினேஷின் அறுவை சிகிச்சை செய்த கையை குறிவைத்து ஆடிய சுசாகி அடுத்த புள்ளியையும் பெற்று இப்போட்டியில் இன்னொருபடி முன்னேறினார். இறுதியில் சில வினாடிகளுக்கு முன்பு சுசாகியை மடக்கிப் போட்டு அடுத்தடுத்த புள்ளிகளைப் பெற்றார். முடிவில் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற அவர் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

சுசாகி இப்போட்டி முன்பு தன் வாழ்நாளில் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்திருந்தார். 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியையே சந்திக்காத அவர், தொடர்ச்சியாக 82 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். அவரை தான் வினேஷ் போகத் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிச் சுற்றில் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை எதிர்கொண்டார். இந்தப் போட்டி ஆரம்பம் முதலே அனல் பறந்த நிலையில், 7க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தன்வசமாக்கினார் வினேஷ் போகத். இப்போது அரையிறுப் போட்டியை உறுதி செய்திருக்கும் அவர் அதில் வெற்றி பெற்றால் வெள்ளி அல்லது தங்கம் உறுதியாகும். ஒருவேளை தோற்றால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆடுவார்.

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். இதனால், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை தங்கம் கிடைக்காத நிலையில், வினேஷ் போகத் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் அந்த கனவை நனவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.