Brinda Review: நரபலி, தொடர் கொலை – சூப்பர் காப் த்ரிஷா! திரில்லர் ஓகே, ஆனா ஏமிரா இதி பாலிடிக்ஸ்?

பிருந்தா (த்ரிஷா கிருஷ்ணன்) ஹைதராபாத் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக (SI) பணிபுரிகிறார். அங்கே அவரது திறமையை அனைவரும் நிராகரிக்கிறார்கள். குறிப்பாக அந்த காவல்நிலையத்தில் முதன்மை பொறுப்பாளரான இன்ஸ்பெக்டர் சாலமன் (கோபராஜு விஜய்) ஆணாதிக்கத்துடன் நடந்து கொள்கிறார். அங்கே பிருந்தாவின் திறமையை மதிக்கும் ஒரே நபர் மற்றொரு சப் இன்ஸ்பெக்டரான சாரதி (ரவீந்திர விஜய்) மட்டுமே. இதற்கு மத்தியில் பிருந்தாவின் பால்ய கால நினைவுகள் அவரை மனதளவில் தொந்தரவு செய்கின்றன. இப்படியான சூழலில் பிருந்தாவின் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியிலிருக்கும் நதிக்கரையோரம் பிணமொன்று கரை ஒதுங்குகிறது.

த்ரிஷா – Brinda Review

அந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதும், சாலமன் அதைத் தற்கொலை வழக்காக முடிக்க நினைக்கிறார். ஆனால் அது ஒரு கொலை என்று பிருந்தா உறுதியான நம்பிக்கையுடன் கூறுகிறார். பிணக்கூராய்வு முடிவும் அதை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி அது ஒரு சீரியல் கில்லரின் வேலை என்று தெரியவர… குற்றவாளி யார், தொடர் கொலைக்குக் காரணம் என்ன, பிருந்தாவின் கடந்த காலம் எவ்வாறு நிகழ்காலத்துடன் மோதுகிறது என்பதை எட்டு எபிஸோடுகளாக த்ரில்லிங் அனுபவமாகத் தர முயன்றிருக்கிறது சோனி லைவ்வில் வெளியாகியிருக்கும் இந்த தெலுங்கு வெப் சீரிஸ்.

பிணத்தைக் கண்ணால் பார்த்தே அது கொலையா அல்லது தற்கொலையா எனக் கண்டறியும் ‘சூப்பர் காப்’ ரோலில் திரிஷா. இறுக்கமான முகம், பாதிக்கப்பட்ட மனநிலை என அழுத்தமான உணர்வுகளை அதிகம் பேசாமல் கண்களால் கடத்துகிறார். தனது புரொமோஷனுக்காக காத்திருக்கும் பாத்திரத்தில் நடித்திருக்கும் ரவீந்திர விஜய், அதிகாரத்துக்கு எதிராகப் பயப்படுவது, நியாயத்தின் பக்கம் நிற்பது ஆகிய இருபுள்ளிகளுக்கு நடுவில் இருக்கும் தத்தளிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தி நம்மைக் கவர்கிறார். மனநிலை சற்றே பாதிக்கப்பட்டவராகவும், கொலை பாதகங்களை இரக்கமின்றி செய்பவராகவும் வரும் ஆனந்த் சாமி நடிப்பு கொஞ்சம் ஓவர் டோஸ். ஜூனியர் சத்யாவாக வரும் ராகேந்து மௌலி, சீனியர் சத்யாவை ஓவர் டெக் செய்து சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். பாசமான தந்தை, நேர்மையான அதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ் நடிப்பில் குறையேதுமில்லை.

Brinda Review

பெரும்பாலான காட்சிகள் இருட்டில் இருந்தாலும் அதைக் கச்சிதமான மீட்டரில் தேர்ந்த ஒளியுணர்வோடு வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கே.பாபு. குறிப்பாக ஊரே கூடும் கோயில் குளத்து க்ளைமாக்ஸ் காட்சியில் நமக்குத் தேவையான உணர்வுகளைச் சரியாகக் கைப்பற்றியிருக்கிறது இவரது கேமரா கண்கள். கதை நான்-லீனியராகச் சொல்லப்பட்டு இருப்பதற்கு ஏற்றவாறு ‘முன் பின்’ என்பதாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அன்வர் அலி. இதில் ஒவ்வொரு எபிசோடிலும் டைட்டில் கார்டு போடும் முன்னர் ஒரு முகவுரை, அதே நேரத்தில் எபிசோடு முடியும் நேரத்தில் அடுத்த எபிசோடை உடனே பார்க்கத் தூண்டும் லீடு என வெப் தொடருக்கு ஏற்ற டெம்ப்ளேட்டில் லாகவமாகக் கத்திரி போட்டிருக்கிறார். ஆனால் ஆறாவது எபிசோடில் முடிந்துவிட்ட கதைக்கு சீரியல் பாணியில் பொறுமையாக ‘பின்கதை’களை இணைத்து அதற்கு பின்னான எபிசோடுகளை நிரப்பியிருக்கிறார்கள்.

ஒருபுறம் கோரமான நரபலியின் துயரில் ஆரம்பிக்கும் கதைக்களம், மறுபுறம் நிகழ்காலத்தில் தொடர் கொலை வழக்குக்கான விசாரணையில் நிற்கிறது. அதிலும் திரைக்கதையாக முதல் எபிசோடிலேயே கொலையாளியின் முகத்தைக் காட்டிவிட்டு, அடுத்தடுத்து குற்றத்தின் பின்னணி என்ன என்கிற கேள்வியோடு திரைக்கதையை நகர்த்திய விதம் சுவாரஸ்யம். ஆனால் பிருந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் பகுதிகள், பழக்கப்பட்ட ‘கிளிச்சே’ காட்சிகளாக இருப்பது வேகத்தடை ஆகிவிடுகிறது. இந்தப் பகுதிகள் கதையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மையக்கதையோடு ஒன்றிவிட்ட பார்வையாளர்களைத் தொடரை விட்டு வெகு தூரம் கூட்டிச் சென்றுவிடுகிறது.

Brinda Review

நல்ல த்ரில்லர் எழுத்தில் உள்ள தந்திரம் என்னவென்றால், கதை முழுக்க ஒரு புதிரைக் காப்பதும், அதை மையபாத்திரங்கள் எப்படி நெருங்குகிறார்கள் என்பதை விறுவிறுப்பான காட்சிகள் கொண்டும் விவரிப்பதுதான். ஆனால் இங்கே விசாரணை நடப்பது நிகழ்காலத்தில் என்றாலும் சி.சி.டி.வி கேமராவையே கடைசி எபிசோடில்தான் பார்க்கிறார்கள். அதேபோல குற்றவாளிக்கு ஒரு எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்பு வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை வைத்து குற்றவாளியை நெருங்காமல் ‘காதைச் சுற்றி மூக்கைத் தொடும்’ தளர்வான எழுத்துகள் தொடரில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன.

சக்தி காந்த் கார்த்திக்கின் மிரட்டலான பின்னணி இசை சில காட்சிகளில் நம்மைத் தூக்கி வாரிப் போடுகிறது. ஆரம்பத்திலிருந்தே மதத்தின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றைச் சாடியே படம் நகர்கிறது. ஆனால் கடைசி மூன்று எபிசோடுகளில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கியிருப்பது ஏனோ?!

அதிலும் குடும்பம், சமூகம் என எல்லா இடத்திலும் அடிவாங்கும் ஒருவனுக்கு நியாயம் கேட்பது போலப் பச்சாதாப பின்னணி இசை எல்லாம் வாசித்துவிட்டு, கடைசியில் எல்லாம் திரைக்கதைக்காக சும்மா என ‘விக்டிம் பிளேமிங்’ செய்வதெல்லாம் போங்கு பாஸ்!

ரவீந்திர விஜய்

குழந்தைப் பருவ சிக்கல்கள், சாதி ஆதிக்கம், மதவெறி ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் மிகவும் கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை. அதிலும் இன்றைய இந்திய அரசியல் சூழலில் ஆதிக்கத்தின் பெயரில் பல உயிர்கள் போய்க் கொண்டிருப்பதை நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆகையால் ஒரு த்ரில்லர் உணர்வுக்காக இத்தகைய பிரச்னைகளை மேம்போக்காக அணுகி “தென்னை மரத்தில் ஒரு குத்து, பனை மரத்தில் ஒரு குத்து” என்பதெல்லாம் இயக்குநரின் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. கருத்துச் சுதந்திரம், கற்பனை சுதந்திரம் என்றாலும் சமூக பிரச்னைகளைக் கையாளும்போது சிறிதேனும் சமூகப் பொறுப்பு அவசியமாகிறது.

Brinda Review

சொல்லவந்த கருத்தில் குழப்பம்… குழப்பம்… குழப்பம்… என்பதையே விட்டுச் சென்றிருந்தாலும், ஒரு வெப் தொடராகத் தொழில்நுட்ப ரீதியாகவும், சில பல பிழைகள் இருந்தாலும் திரில்லிங்கான சலிப்பில்லாத திரைக்கதையாலும் நம்மை ஈர்க்கிறாள் இந்த `பிருந்தா’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.