வயநாட்டில் உலக தரத்தில் மறுசீரமைப்பு பணிகள்; பினராயி விஜயன் உறுதி

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. கனமழை மற்றும் நிலச்சரிவு என அடுத்தடுத்து பாதிப்பு ஏற்பட்டு மீட்பு பணியும் தொய்வடைந்தது.

நிலச்சரிவால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. கிராமத்தினர் பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை.

4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 8-வது நாளாக மீட்பு பணிகள் இன்று தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டார். அவர் பேசும்போது, வயநாட்டில் உலக தரத்திலான மறுசீரமைப்பு பணிகள் உறுதி செய்யப்படும்.

நாட்டுக்கும் இந்த உலகத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் வகையிலான ஒரு மறுகுடியமர்த்தும் மாதிரியை உருவாக்குவதே எங்களுடைய இலக்காக இருக்கும் என்றார்.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 5 சதவீத தொகையை பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளனர் என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.