விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், புகழ்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீஆண்டாள் கோயில் உள்ளது. புராணத்தின்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில், பெரியாழ்வார் மகளாக ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த ஆண்டாள், இறைவனை வேண்டிப் பாமாலை பாடிப் பின்னர் பூமாலை சூடினார் என்பது வரலாறு.
பூமிப்பிராட்டியின் அம்சமான ஆண்டாள், ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோதை நாச்சியாராக அருள்பாலிக்கிறார். ஆடிப்பூரம் நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்று ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாரை தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறலாம். திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தேரை வடம் பிடித்து இழுத்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்சவம், எண்ணெய்க் காப்பு உற்சவம், தெப்பத்திருவிழா ஆகியவையும் வெகு விமர்சையாக நடைபெறும் விழாக்களாகும். அந்தவகையில், ஆண்டாள் அவதரித்த தினமான ஆடிமாதம் பூரம் நட்சத்திர நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த விழாவில் கலந்துகொள்ளப் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டனர்.
இந்த உற்சவம் கடந்த 30 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா முதல் திருநாளான்று, இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது. தொடர்ந்து, 5-ம்நாள் விழாவான கடந்த 3-ம் தேதி ஐந்து கருட சேவையும், 7-ம் நாள் விழாவான கடந்த 5-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து, திருவிழாவின் 9-ம்நாளான இன்று, முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது.
தேர்த் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தேர் எனப் பெயரெடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் தேரின் தேரோட்டம் இன்று காலை 9.05 மணிக்குத் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மஞ்சள் பட்டாடை உடுத்திய கோலத்தில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க, தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் இணைந்து வடம் பிடித்து இழுத்துத் தொடங்கிவைத்தனர்.
முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதுரை கள்ளழகர் சூடிக்களைந்த வஸ்திரத்தை உடுத்தி திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’, ‘கோவிந்தா, கோபாலா’ என உணர்ச்சி பெருக்காக கோஷமிட்டு வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
தொடர்ந்து, நான்கு ரத வீதிகளின் வழியாக தேர் சுற்றிவந்து பிற்பகலில் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்டத்தையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளுர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
மேலும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு ஆடிப்பூரத் தேர் திருவிழாவுக்காக வந்திருந்தனர். இந்தநிலையில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1,800 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.