ஆன்லைன் மூலம் பெண்களிடம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சோசியல் மீடியா மூலம் அறிமுகமான நபர் தன்னிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக, போலீஸில் புகார் செய்திருந்தார். அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மோசடி செய்த நபரின் பெயர் தீரன் (37) என்று தெரியவந்தது. அவனது நடமாட்டத்தை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவனை கைது செய்த போலீஸார், அவனது சோசியல் மீடியா கணக்குகள் மற்றும் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, 50 பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. அவனிடம் விசாரித்தபோது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதாகவும், தனியாக இருக்கும் பெண்கள் அல்லது பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களிடம் பழகுவதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ரஜபுத் கூறுகையில், “கைது செய்யப்பட்டுள்ள தீரன், சோசியல் மீடியாவில் மட்டும் பெண்களுடன் சாட்டிங் செய்து வந்தார். பெண்களிடம் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு, எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணத்தை வசூலிப்பது வழக்கம். பணம் கிடைத்தவுடன் தொடர்பை துண்டித்துக்கொள்வார். குஜராத் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் மோசடி செய்துள்ளார். ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துவிட்டால், அவருடன் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் பேசுவது வழக்கம்.
அப்பெண்கள் நேரில் சந்திக்கவேண்டும் என்று சொன்னால், எதாவது ஒரு காரணத்தை சொல்லி நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்தார். வேலையில்லாமல், திருமணம் செய்யாமல் இருக்கும் தீரன் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர். எனவே அவரது பேச்சில் பெண்கள் எளிதில் மயங்கி விடுகின்றனர். கார்ப்ரேட் கம்பெனியில் மிகப்பெரிய பதவியில் இருப்பதாக பெண்களிடம் தெரிவித்து வந்துள்ளார். அவர்களிடம் பல்வேறு காரணத்தை சொல்லி பணம் கடன் வாங்கிவிட்டு, அவர்களுடனான தொடர்பை துண்டித்துக்கொள்வது வழக்கம். பெண்களிடம் வசூலிக்கும் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். ஒரு முறைகூட தான் சோசியல் மீடியாவில் பழகும் பெண்களை தீரன் சந்தித்தது கிடையாது” என்றார்.