டாக்கா: “வங்கதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை” என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் நயாபால்டனில் நடந்த வங்கதேச தேசிய கட்சியின் பேரணியில் காணொலி வாயிலாக கலிதா ஜியா உரையாற்றினார். 2018-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஆற்றிய முதல் பொது உரை இது. இந்த உரையில் அவர், “நான் இப்போது விடுவிக்கப்பட்டேன். சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதற்காக செய் அல்லது செத்து மடி எனும் போராட்டத்தில் ஈடுபட்ட துணிச்சலான மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது விடுதலைக்காக போராடிய, பிரார்த்தனை செய்த மக்களுக்கு நன்றி.
இந்த வெற்றியானது கொள்ளை, ஊழல் மற்றும் தவறான அரசியலில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு புதிய வாய்ப்பை நமக்கு கொண்டு வந்துள்ளது. நாம் இந்த நாட்டை வளமான நாடாக சீர்திருத்த வேண்டும். இளைஞர்கள்தான் நமது எதிர்காலம். அவர்களின் கனவை நிறைவேற்ற, ஜனநாயக முறையில் வங்கதேசத்தை புதிதாக கட்டமைக்க வேண்டும். இதற்காகத்தான் அவர்கள் தங்கள் ரத்தத்தை சிந்தியிருக்கிறார்கள். இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அழிவு, கோபம், பழிவாங்கலுக்குப் பதிலாக நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நமக்குத் தேவை அன்பும் அமைதியுமே” என்று தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டைப் பெற்ற கலிதா ஜியா: சிறையில் இருந்து வெளியே வந்ததை அடுத்து முன்னாள் பிரதமர் கலிதா ஜியா புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார். இதனை அவரது கட்சி தெரிவித்துள்ளது.
வன்முறையை கைவிட முகம்மது யூனுஸ் வேண்டுகோள்: வங்கதேசத்தின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசுபெற்ற முகம்மது யூனுஸ் நேற்று நியமிக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பின் கோரிக்கையை ஏற்று வங்கதேச அதிபர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் இருக்கும் முகம்மது யூனுஸ் நாளை (ஆக.8) நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நமது புதிய வெற்றியை சிறந்த முறையில் பயன்படுத்துவோம். நமது தவறுகளால் இதனை நழுவ விடக்கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். வன்முறையை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.