புதுடெல்லி: சாலை விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு: மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் “இந்தியாவில் சாலை விபத்துகள்” என்ற அறிக்கையை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதன்படி, 2018ம் ஆண்டு இந்தியாவில் நடந்த மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 403. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 593. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 715. இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக 67 ஆயிரத்து 279 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 18 ஆயிரத்து 392 பேர் உயிரிழந்துள்ளனர். 69 ஆயிரத்து 834 பேர் காயமடைந்துள்ளனர்.
2019ம் ஆண்டு இந்தியாவில் 4,56,959 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1,58,984 பேர் உயிரிழந்துள்ளனர். 4,49,360 பேர் காயமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 62,685 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 18,129 பேர் உயிரிழந்துள்ளனர். 63,132 பேர் காயமடைந்துள்ளனர். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டும் தமிழகத்தில்தான் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் நடந்துள்ளன.
2020ம் ஆண்டில் தேசிய அளவில் 3,72,181 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1,38,383 பேர் உயிரிழந்துள்ளனர். 3,46,747 பேர் காயமடைந்துள்ளனர். அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 49,844 விபத்துகள் நடந்துள்ளன. 14,527 பேர் உயிரிழந்துள்ளனர். 47,618 பேர் காயமடைந்துள்ளனர். 2021ம் ஆண்டில் தேசிய அளவில் 4,12,432 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில், அதிகபட்சமாக 55,682 விபத்துகள் நடந்துள்ளன. 15,384 பேர் உயிரிழந்துள்ளனர். 55,996 பேர் காயமடைந்துள்ளனர்.
2022ம் ஆண்டில் இந்திய அளவில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4,61,312. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,68,491. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,43,366. தமிழ்நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 64,105. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,884. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 67703.
நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதன்படி, சாலைப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முகமைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்/வாரம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.
சாலைகள் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை குறித்து மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள், நிபுணர்கள் மூலம் சாலைப்பாதுகாப்பு தணிக்கை, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மோட்டார் வாகனங்களால் விபத்தை ஏற்படுத்தி, தப்பிச்சென்றுவிடும் நேர்வுகளில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 25 ஆயிரம் என்பதிலிருந்து ரூ.2லட்சமாகவும், படுகாயமடைந்தோருக்கான இழப்பீட்டுத்தொகை ரூ.12,500 என்பதிலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.