“அவர் 100 கிராம் விரைவில் குறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவருக்கு இனி எதுவும் கிடைக்காது” என வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து நடிகையும், பா.ஜ.க எம்பியுமான ஹேமா மாலினி பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போட்டிகள் முடிந்தபிறகு சத்துக்காக அவர் எடுத்துக்கொண்ட உணவுகளும் பானங்களும் அவர் உடல் எடையை இரண்டு கிலோ அதிகரித்துவிட்டன. இதனால் ஒரே இரவில் இரண்டு கிலோ எடையைக் குறைக்க வேண்டிய நிலை. வினேஷ் எவ்வளவோ கடுமையாகப் பயிற்சிகளைச் செய்தும் அவரால் முடியவில்லை.
இறுதிப் போட்டியான இன்று காலையில் நடந்த எடைப் பரிசோதனையில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் வினேஷ். இதனால், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், “அவர் 100 கிராம் விரைவில் குறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவருக்கு இனி எதுவும் கிடைக்காது” என வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து நடிகையும், பா.ஜ.க எம்பியுமான ஹேமா மாலினி பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இதுதொடர்பாக பேசிய ஹேமா மாலினி, “இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது விசித்திரமாக இருக்கிறது.
எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். பெண்களுக்கும், கலைஞர்களுக்கும் இது ஒரு பாடம். 100 கிராம் எடை கூட பெரிய விஷயமாக நமக்கு இருக்கும். வினேஷ் 100 கிராம் விரைவில் குறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவருக்கு இனி எதுவும் கிடைக்காது” என்று பேசியிருக்கிறார். ஹேமா மாலினியின் இந்த பேச்சுக்குப் பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.