ஒலிம்பிக்கில் எனக்கு சதி நடக்கும் என 3 மாதங்களுக்கு முன்பே சொன்ன வினேஷ் போகத்..!

Vinesh Phogat News Tamil : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட அவர், அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனால் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி எட ஏதேனும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியானது. வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் ஆடுவதை காண ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. ஆனால், பேரதிர்ச்சியாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. முன்னாள் மல்யுத்த மற்றும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய வீர்கள் பலர் வினேஷ் போகத் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என்றும், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் இது குறித்து தெரிவித்துள்ள கருத்தில், வினேஷ் போகத்துக்கு எதிராக சதி நடந்திருக்கிறது என கூறியுள்ளார். மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் மூன்று கிலோ எடையை கூட குறைக்க முடியும் எனும்போது வெறும் 100 கிராம் அதிகமாக இருத்தற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த சூழலில், தனக்கு எதிராக ஒலிம்பிக் போட்டியில் சதி நடக்க வாய்ப்பு இருப்பதாக வினேஷ் போகத் கடந்த ஏப்ரல் மாதமே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாக இருக்கும் பயிற்சியாளர்கள் எல்லோரும் போட்டியின் இடையே கொடுக்கும் தண்ணீரில் எதையாவது கலந்து கொடுத்துவிடுவார்கள், அதனால் நான் ஊக்க மருந்து வழக்கில் சிக்க கூட வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். அதனால் என்னுடைய பயிற்சியாளரையும், பிசியோதெரபிஸ்டையும் இந்திய அரசு என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால், மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வினேஷ் போகத் தெரிவித்திருந்தார். 

April 12, 2024

அத்துடன் வினேஷ் போகத் அந்த பதிவில், ” என்னை ஒலிம்பிக்கில் விளையாடவிடாமல் தடுக்க பிரிஜ் பூஷனும் அவரது ஆதரவாளரான சஞ்சய் சிங்கும் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகின்றனர். அணியுடன் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பயிற்சியாளர்களும் பிரிஜ் பூஷனுக்கும் அவரது அணிக்கும் பிடித்தமானவர்கள். ஆதலால், எனது போட்டியின் போது எனது தண்ணீரில் எதையாவது கலந்து குடிக்க வைத்து விடுவார்கள். என்னை ஊக்கமருந்து வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கலாம். எங்களை மனரீதியாகத் துன்புறுத்த எல்லா முயற்சியும் எடுக்கப்படுகிறது. இவ்வளவு முக்கியமான போட்டிக்கு முன் எங்களை இப்படி சித்திரவதை செய்வது எவ்வளவு தூரம் நியாயம்?. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பியதால் நாட்டுக்காக விளையாடச் செல்லும் முன்பே அரசியலை எதிர்கொள்ள வேண்டுமா?. நம் நாட்டில் தவறுக்கு எதிராக குரல் எழுப்பியதற்கு இதுதான் தண்டனையா?, நாட்டுக்காக விளையாடுவதற்கு முன் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். ஜெய் ஹிந்த்” என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு இப்போது வைரலாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.