கோவை: ஜெர்மனி விமானப்படை அதிகாரிகள் குழுவினர் நீலகிரி மலை ரயிலில்பயணம் செய்து, வெலிங்டன் ராணுவ மையத்துக்குச் சென்றனர். ‘தாரங் சக்தி’ என்ற பெயரில் முதல்முறையாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளின் விமானப் படைகளுடன் இணைந்து, இந்திய விமானப்படை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
முதல்கட்டமாக இந்தியா-ஜெர்மனிநாடுகளுக்கு இடையே கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் 8 நாட்கள் கூட்டுப் போர் பயிற்சி கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கியது.
இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மனி நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில், இந்தியா,ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் 8 நாட்கள் கோவையில் தங்கி, சூலூர் விமானப்படை தளத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க வந்துள்ள ஜெர்மனிவிமானப்படை தலைமை தளபதிஇங்கோ கெர்ஹார்ட்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட விமானப்படை உயரதிகாரிகள் குழுவினர் நேற்று காலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தனர்.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மலைரயில் தொடர்பான புகைப்படக் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர். மேலும், இந்திய விமானப் படை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகளிடம், நீலகிரி மலை ரயிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் நீலகிரி மலை ரயிலில் ஜெர்மனி விமானப் படை வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறப்புபெட்டியில் பயணம் மேற்கொண்டனர்.
இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்தனர். ஜெர்மனிய விமானப்படை அதிகாரிகள், மலை ரயிலில் குகைகளின் அழகையும், பசுமையையும், அடர்ந்த வனப்பகுதியையும் கண்டு ரசித்தபடிகுன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்துக்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.