நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசின் டான்-டீ நிறுவனம் முன் வர வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், பிபிடிசி நிர்வாகம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என தற்காலிக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதற்கிடையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில், ”மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த இயலாது. தேயிலைத் தோட்டத்தை டான்-டீ நிர்வாகத்திற்கு வழங்குவது சாத்தியமற்றது” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
பின்னர் இது குறித்த வழக்கில் விரிவான விசாரணைக்காக வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கபப்ட்டுள்ளது. இந்த நிலையில், “மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தி மாஞ்சோலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்து போரட்டம் நடத்தினர். இது குறித்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் பேசினோம், ”கடந்த 2 மாதங்களுக்கு மேல் எந்த வருமானமும் இல்லாமல் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எந்த மருத்துவ வசதியும் இல்லாமல் சங்கடப்பட்டு வருகிறோம். மாஞ்சோலை பகுதி ஒரு தீவு போலக் காட்சியளித்து வருகிறது. மாஞ்சோலையில் கடந்த 5 தலைமுறைகளாக மலைப்பகுதியில் வாழ்ந்ததால் அவர்களுக்கு கீழே சமவெளிப் பகுதியில் சொந்த இடமோ, சொந்த வீடோ கிடையாது. அவர்களுக்கு தோட்டத் தொழில் தவிர எந்த தொழிலும் தெரியாது. எஸ்டேட்டை விட்டு வெளியேற்றிவிட்டால் அவர்கள் அகதிகள்போல ஆகிவிடுவார்கள். இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு மட்டுமே அவர்கள் வாழ்வில் நம்பிக்கையைக் கொண்டு வர முடியும்.
கடந்த 1967-ம் ஆண்டு இலங்கை நாட்டிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்த தமிழர்களுக்காக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தை (டான் டீ) உருவாக்கி அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழ்நாடு அரசு உத்திரவாதப்படுத்தியதைப்போல மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்தி மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள தனியார் நிறுவன எஸ்டேட்டுகளை தமிழ்நாடு அரசின் டான் டீ நிறுவனம் எடுத்து நடத்த வேண்டும்.” என்றனர்.