கொரோனா தொற்று மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகின்ற நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மருத்துவ (திருத்த) சட்ட மூலங்கள் இரண்டின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாட்டை விட்டு சென்ற மருத்துவர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்து சேவையை வழங்க ஆரம்பித்துள்ளதாகவும் அது மிகவும் சிறந்த பெறுபேறு என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார். அவ்வாறே நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களுக்கு நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
திருத்த சட்டமூலங்கள் இரண்டு தொடர்பாகவும் கருத்து வழங்கிய அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண , இச்சட்ட மூலத்தின் ஊடாக மருத்துவ சேவையின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்ற இலங்கை வைத்தியர்களுக்கு தற்காலிக பதிவைப் பெற்றுக்கொள்ளும் போது சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இச்சட்ட மூலத்தின் ஊடாக அவ்வெளிநாட்டுப் மருத்துவப் பட்டத்தைப் பெற்று நமது நாட்டின் வைத்தியர்களுக்கு ஒரு வருட காலத்திற்குத் தற்காலிக பதிவையும் பின்னர் அவர்களுக்கு நிரந்தரப் பதிவையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்திற்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மேலதிகமாக மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண குறிப்பிட்டார்.