கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `சூர்யா 44′ படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது சூர்யாவிற்கு தலையில் காயம்… உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாள்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு பின் கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவை இயக்கி வருகிறார். இது சூர்யாவின் 44வது படமாகும். பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் எனப் பலரும் இதில் நடித்து வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நீண்ட ஷெட்யூலாக நடந்தது. அந்தமானில் சூர்யா – பூஜா ஹெக்டே காம்பினேஷனில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. தவிர, அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அந்தமான் ஷெட்யூலைத் தொடர்ந்து கடந்த மாதம் படக்குழு ஊட்டி சென்றடைந்தது. அங்கேதான் ‘சூர்யா 44’ படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில்தான் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டது என்றும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து படவட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் இனி…
கடந்த சில நாள்களாக ஊட்டியில்தான் ஷூட்டிங் நடந்து வருகிறது. இங்கே ஆக்ஷன் சீக்குவென்ஸ்கள் படமாக்கி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டைக் காட்சியின் போது, ஃபைட்டர்களுடன் சூர்யா மோதும் காட்சி எடுத்துள்ளனர். அப்போது சூர்யாவின் எதிரே உள்ள ஃபைட்டர் நீளமான கத்தியை வைத்து அவருடன் சண்டையிடும் காட்சியை படமாக்கியுள்ளனர். சூர்யாவின் எதிரே உள்ளவர் கத்தியை வீசும் போது, அது தவறுதலாக சூர்யாவின் தலையில் பட்டுவிட்டது… ரத்தம் கொட்டவே, பதறிய கார்த்திக் சுப்புராஜ் உட்படப் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். சூர்யாவின் தலையில் லேசான காயம் ஏற்பட்டதால், அன்று மாலையே படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். சூர்யாவின் காயத்திற்குச் சின்னதாக சிகிச்சை எடுத்துக்கொண்டதுடன், அவரை மருத்துவர்கள் சில நாள்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதால், சென்னை திரும்பிவிட்டார் சூர்யா.
“இந்த தகவலைப் பெரிதுபடுத்த வேண்டாம். சண்டைக்காட்சியின் போது இப்படிக் காயம் ஏற்படுவது வழக்கமானதுதான்” என சூர்யா பெருந்தன்மையாகச் சொல்லியிருக்கிறார் என்றும், யூனிட்டில் உள்ள ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் மூலமாக இந்தத் தகவல் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். சூர்யா நலமுடன் இருக்கிறார். இன்னும் சில நாள்களுக்குப் பிறகு ஊட்டி படப்பிடிப்புக்கு மீண்டும் செல்லவிருக்கிறார்.
ஊட்டி ஷெட்டியூல் இம்மாதம் 15ம் தேதியன்று நிறைவடைவதாக இருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்கிறார்கள்.