IPL Mega Auction 2025: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை (IPL 2025) பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இப்போதுதானே ஐபிஎல் முடிந்தது, அதற்குள் அடுத்த தொடரை ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவான வாசகர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். ஆனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும் ஏன் இப்போது இருந்த ஐபிஎல் 2025 சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்று…
ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மெகா ஏலம் (IPL Mega Auction) நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்திற்கு முன்னர் 10 அணிகளில் இருந்தும் எக்கச்சக்க வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள், சில வீரர்கள் மட்டுமே அதே அணியால் தக்கவைக்கப்படுவார்கள். மேலும், பல அணிகள் மொத்தமாகவே உருமாறி புது அவதாரம் எடுக்கும், அதுவும் இந்த ஆண்டு ஸ்டார் பிளேயர்களான மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா ஆகியோரின் நிலையை அறிந்திடவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஐபிஎல் மெகா ஏலம் 2025
இன்னும் ஐபிஎல் மெகா ஏலம் குறித்த எவ்வித தகவல்களும், விவரங்களும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஜூலை 31ஆம் தேதி அனைத்து அணிகளின் உரிமையாளர்களுடன் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு ஆலோசனை நடத்தியது. அதில் பல்வேறு அணிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒரு சில அணிகள் 7-8 வீரர்களை தக்கவைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் சில அணிகளோ வழக்கம் போல் 4 வீரர்களை தக்கவைப்பதுடன் RTM கார்டுகளையும் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
மேலும், இம்பாக்ட் பிளேயர் விதி குறித்தும், ஏலத்தில் விலை போன பின்னர் ஐபிஎல் தொடரை புறக்கணிக்கும் வெளிநாட்டு வீரர்களை தடை விதிப்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஐபிஎல் மெகா ஏலத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்றும் கூட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து எப்போது ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகள் அறிவிக்கப்படும் என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) அதுகுறித்து அப்டேட் அளித்துள்ளார்.
அஸ்வின் கொடுத்த அப்டேட்
அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலில் ‘Around The World Of Cricket’ என்ற தலைப்பில் நேற்று எபிசோடில் ஐபிஎல் ஏலம் குறித்து மட்டுமின்றி இந்தியா – இலங்கை தொடர், இந்தியா – ஜிம்பாப்வே தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் The Hundred தொடர் உள்ளிட்டவை குறித்தும் பேசினார்.
அதில் ஐபிஎல் ஏலம் குறித்து பேசுகையில், RTM கார்டுகளால் வீரர்களுக்கு சரியான தொகை கிடைக்காமல் போகிறது என்பது குறித்தும், ஏலத்திற்கு பின் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்கும் வெளிநாட்டு வீரர்களை தடை செய்யும் விதி குறித்தும் பேசியிருந்தார். இந்திய இளம் வீரர்களை வளர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில், இந்தியர்களே பயன்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் மெகா ஏலம் குறித்த இந்த Retention விதிகள் செப்டம்பர் முதல் வாரமோ அல்லது கடைசி வாரத்திற்குள்ளோ வரலாம் என்று தெரிவித்த அவர், அப்போதே மெகா ஏலத்தின் தேதிகள், ஏலம் நடக்கும் இடம் ஆகியவை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, 7-8 Retention விதியை கொடுப்பது என்பது நல்லதல்ல என்றும் 4-5 Retention கொடுக்கலாம் எனவும் பரிந்துரைத்தார்.