சாவின் விளிம்பிலிருந்து உயிர்பிழைத்த இருவரின் பயணமே இந்த ‘மின்மினி’.
2016-ம் ஆண்டு, நிகழ்காலம் என இரண்டு அத்தியாயங்களாகப் பிரிகிறது கதை. முதல் அத்தியாயம் பாரி (கௌரவ் காளை), சபரி (பிரவீன் கிஷோர்), பிரவீனா (எஸ்தர் அனில்) ஆகியோரின் பள்ளிப் பருவத்தைப் பேசுகிறது. ஒன்றாகப் படிக்கும் பாரி, சபரி இருவருக்கும் இருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, அது நட்பாகத் துளிர்க்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்துவிடுகிறது. இது சபரியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சபரியை மீட்டெடுக்கப் புதிதாக உள்ளே நுழையும் நட்பான பிரவீனா என்ன செய்தார், லடாக்கில் நிகழும் இரண்டாவது அத்தியாயத்தில் சபரி தன் வாழ்வை மீட்டானா என்பதே படத்தின் கதை.
கதாபாத்திரங்களின் பள்ளி நாள்கள் 2015-ல் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது எடுக்கப்பட்டிருக்கின்றன. கதைப்படி அவர்கள் வளர்ந்த பின்னர் நடக்கும் நிகழ்வுகள் 8 வருடங்கள் கழித்து மீண்டும் அதே நடிகர்களை வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. சினிமாவின் இந்த அரிதினும் அரிதான முயற்சிக்கு இயக்குநர் ஹலீதா ஷமீமுக்குப் பாராட்டுகள்.
பள்ளிப் பருவத்தில் குறும்புத்தனங்களும் சேட்டைகளும் சுறுசுறுப்பும் நிரம்பிய சிறுவனாக மிளிர்கிறார் கௌரவ் காளை. யார் வம்புக்கும் செல்லாத தனிமை விரும்பி, இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வலி என முதல் அத்தியாயத்தில் தேவையான உணர்வுகளைக் கடத்துகிறார் பிரவீன் கிஷோர். ஆனால் இரண்டாம் அத்தியாயத்தில் இமயமலை பைக் பயணம் போலத் தன் நடிப்பிலும் சிரமப்பட்டிருக்கிறார். சிறுமியாகப் பெரிதாகக் காட்சிகள் இல்லாவிட்டாலும் நிகழ்காலத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் எஸ்தர் அனில். உதகமண்டலம், இமயமலை என இரு மலைப்பிரதேசங்களின் எழிலையும் அழகாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. கால இடைவெளிகளை கலர் டோனினால் வேறுபடுத்தி மென்மையான ஒளியுணர்வால் வருடியிருக்கிறார்.
முதல் பாதியில் ஒரு நல்ல ஹைக்கூவைச் சேகரிப்பது போலக் காட்சிகளைச் சிறப்பாகக் கோத்திருக்கிறார் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, தத்துவ புத்தகம் போல நீளும் இரண்டாம் பாதியின் சில காட்சிகளை இன்னும் கவனித்திருக்கலாம். அறிமுக இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான் இசையில் ‘இரு பெரும் நதிகள்’ பாடல் நமது பிளேலிஸ்ட்டில் இடம்பெற்று மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் காதல் ராகம். பின்னணி இசை ரசிக்க வைத்தாலும் நிசப்தமே இல்லாமல் எல்லா இடங்களிலும் வருவது, காட்சிக்கான இயல்பினையும் உணரமுடியாத நிலைக்கு சில இடங்களில் கொண்டு செல்கிறது.
இது புது முயற்சி என்று தெரிந்தே நாம் திரைக்குள் வர, பள்ளிப் பருவக் காட்சிகள் குட்டி குட்டி கியூட் மொமெண்ட்களால் நம்மை இயல்பாகவே ரசிக்க வைக்கின்றன. அதிலும் பாரியின் கதாபாத்திர வடிவமைப்பு நம்மோடு நெருக்கமாகி பீல் குட் உணர்வைத் தருகின்றன. மலையாளி வார்டன் செய்யும் சில கட்டாய நகைச்சுவை காட்சி, துணை நடிகர்களின் சுமாரான நடிப்பைத் தவிர, இன்றைய திரைப்படத்தில் நாம் அரிதாகவே காணும் மென்மையான உணர்வினை படம் அளிப்பது கூடுதல் ப்ளஸ்!
ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன் முதல் பாதியில் இருக்கும் அந்த இயல்பு அப்படியே மிஸ்ஸிங்! ‘வாழ்க்கை என்றால் என்ன தெரியுமா’, ‘நட்சத்திர துகள்கள்’, ‘செலஸ்டியல் பாடி’ எனத் தத்துவ வகுப்புகளாக செயற்கைத்தனங்கள் விரிகின்றன. அதிலும் ‘நதிகள் இணைகின்றன’ என்று பாடலின் வரிகளையே மீண்டும் வாய்ஸ் ஓவர் வசனமாகவும் வைத்து ரிப்பீட் அடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
பிழையே செய்யாத ஒருவனின் குற்றவுணர்வைப் போக்குவதாகவும், தன்னை மறந்து தன் திறமையை மறந்து வேறுபயணத்தில் இருக்கும் ஒருவனை மீட்பதாகவும் பின்னப்பட்ட தன்னுடைய கதைக்கு உணர்வுபூர்வமாக உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். அதற்கான விதையாக முதல் பாதியில் வைத்த காட்சிகள் வேரினைப் பிடித்தாலும், இரண்டாம் பாதி கனி கொடுக்கவில்லை. திரைக்கதை இமயமலையின் வளைவுகளாகச் சிக்கலில் சுற்ற, அவர்களோடு சேர்ந்து நாமும் மாட்டிக்கொண்ட உணர்வைத் தந்து அயர்ச்சியை ஏற்படுத்துகிறது படம்.
உண்மையைச் சொல்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற போதிலும் ஏன் நாயகி அதைச் சொல்லத் தயங்குகிறார் என்பதற்கு எந்தத் தெளிவான விளக்கமும் கடைசிவரை புலப்படவில்லை. இத்தனை வருடங்கள் காணாமல் போன நாயகனைத் தேடாத நாயகி, இமயமலைப் பயணத்துக்கு மட்டும் இணைவது ஏன் என்பதற்கான காரணங்களை எல்லாம் வெறும் வாய்ஸ் ஓவர்களாகக் கடந்து போயிருப்பதும் அதீத சினிமா உணர்வினைத் தந்துவிடுகிறது.
புதுமையான முயற்சியாக மின்னும் இந்த ‘மின்மினி’ ஊட்டி காட்சிகளில் அழகாக மிளிர்ந்தது. இமயமலை சென்றபிறகும் அதன் ஒளியைக் குன்றவிடாமல் பத்திரப்படுத்தி இருந்தால் மறக்க முடியாத பயணமாகியிருக்கும்.