"100 இளைஞர்கள் போதும், கடல்ல உயிரிழப்பே நடக்கவிடாம தடுக்கலாம்"- கடலோடி வீரமுத்து

வீரமுத்து மூத்த கடலோடி. பத்து வயசுல அப்பாவோட விரல் பிடிச்சுக்கிட்டு கடலுக்குள்ள இறங்கினவருக்கு இப்போ வயது 78.

அறுபத்தெட்டு ஆண்டுகள் கடலோட பந்தம் கொண்ட வீரமுத்து, ஈஞ்சம்பாக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரைக்கும் கடல்ல பள்ளம் எது, மேடு எதுங்கிற அளவுக்கு அனுபவங்களைச் சேர்த்து வச்சிருக்காரு. கைகால்கள் தளர்ந்து நடக்கும்போதே மெல்லத் தள்ளாடுற வீரமுத்து, கடலுக்குள்ள இறங்கிட்டா வேற மாதிரி ஆயிடுறார். ஆமை தன் துடுப்பால நீரோட்டத்தைப் பிடிச்சுக்கிட்டு நீந்துற மாதிரி மணிக்கணக்குல கடல்ல நீந்துறார். இந்த நீச்சல் திறனால வங்காள விரிகுடா கடல்ல பறிபோகவிருந்த நூற்றுக்கணக்கான உயிர்களை மீட்டிருக்கார்.

வீரமுத்து

ஏரி, குளங்கள்ல பழகின நீச்சல் கடல்ல எடுபடாது. அலையோட வேகம், நீரோட அடர்த்தி, சூழ்ந்து நிக்குற தண்ணீரைப் பார்த்து உருவாகுற பயம்னு எவ்வளவு பெரிய நீச்சல்காரணும் அலைக்கு முன்னால அடங்கிப்போவான். கடலை முழுசா உள்வாங்கின அதோட அறிவியலை தன் அறிவால கிரகிச்சுக்கிட்ட ஒருத்தரால தான் கடல்ல தயக்கமில்லாம நீந்த முடியும். வீரமுத்துவுக்கு கடல் அறிவியல் அத்துபடியாருக்கு. எத்தப் பக்கம் பாறை, எந்தப் பக்கம் சேறு, நீரோட்டத்தின் போக்கு எப்படியிருக்குன்னு எல்லாத்தையும் கரையில இருந்தே கணிக்கிற அளவுக்கு இயற்கை அவருக்கு அவ்வளவு ஞானத்தைத் தந்திருக்கு.

சென்னைக்கும் மகாபலிபுரத்துக்கும் இடைப்பட்ட கடல், குளிக்க ஏதுவானது இல்லை. இது தெரியாம ஆர்வக்கோளாறுல உள்ளே இறங்கிறவங்க அலையில் சிக்கி உயிரை இழக்கிறாங்க. மெரினா தொடங்கி மகாபலிபுரம் வரைக்கும் ஒவ்வோராண்டும் 200க்கும் மேற்பட்டவர்கள் கடலுக்குள்ள இறங்கி உயிரிழக்கிறாங்க. பொழுதுபோக்குக்காகவும் கொண்டாட்டத்துக்காகவும் கடற்கரைக்கு வர்ற குடும்பங்கள் கண்ணெதிரே தங்கள் உறவைப் பறிகொடுத்து நிலைகுலைஞ்சு நிக்கிறதைப் பாத்து பரிதாபப்பட்ட வீரமுத்து, அதுக்காகவே தன் மீத வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்டார்.

வீரமுத்து

மீனவர்களுக்கு கடல் அத்துப்படியா இருக்கும். எவ்வளவு ஆபத்தா இருந்தாலும் கடலை வென்று அவங்க கரைக்கு வந்திடுவாங்க. நீச்சலுக்கு உடல் வலுவோட மன வலுவும் வேணும். ஆனா, இந்தத் தலைமுறை மீனவர்களுக்கு கடலும் நீச்சலும் கொஞ்சம் கொஞ்சமா அந்நியமாகிக்கிட்டிருக்கு.  நீச்சலோட முதல்படி தன்னைக் காப்பாத்திருக்கிறது. இரண்டாவது படி மத்தவங்களைக் காப்பாத்துறது. வீரமுத்துக்கு இருக்கிற ஒரு பெருங்கனவு, தன்னை மாதிரி வலுவுள்ள 100 நீச்சல் வீரர்களை உருவாக்குறது. அதுக்காக இளைஞர்களை ஈர்க்கவும் விழிப்புணர்வு உருவாக்கவும் தண்ணீருக்குள்ள இறங்கி நிறைய சாகசங்களை செய்றார் வீரமுத்து.

அஞ்சாறு மணி நேரம் தண்ணியில மிதக்குறது, மிதந்துக்கிட்டே தேநீர் அருந்துறது, சாப்பிடுறது, பேப்பர் படிக்கிறதுன்னு ஆச்சர்யப்படுத்துறார். தனக்கு மேல மோட்டார் இன்ஜினைப் பொருத்திக்கிட்டு தானே படகா மாறிப் பயணிக்கிறார். ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற பெரிய ஏரியில சைக்கிள் ஓட்டியும் எல்லோரையும் விழி உயர்த்த வச்சிருக்கார். ஈஞ்சம்பாக்கத்துல இருந்து மெரினா வரைக்கும் 22 கடல் நாட்டிக்கல் மைலை 5 மணி நேரம் 10 நிமிஷத்துல ஓய்வேயில்லாம நீந்திக்கடந்து சாதிச்சிருக்கார் வீரமுத்து.  

வீரமுத்து

தன்னோட அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்த நினைக்கிற இந்த நல்ல மனசுக்காரர், ஒரு கடல் நீச்சல் பயிற்சி மையம் அமைக்கிறதுக்காக அனுமதி கேட்டு அரசு அலுவலகங்களுக்கு நடந்து ஓஞ்சுட்டார். கடல் மரணங்களைத் தடுக்க வீரமுத்து மாதிரியான அனுபவக் கடலோடிகளைப் பயன்படுத்தி அரசு திட்டங்களை உருவாக்கணும்ங்கிறது ஒட்டுமொத்த மீனவர்களோட கோரிக்கையா இருக்கு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.