பாண்டிச்சேரியில் வசித்துவரும் பார்வை சவால் கொண்ட பியானோ கலைஞர் கிருஷ்ணாவுக்கு (பிரஷாந்த்), லண்டனுக்குச் சென்று பெரிய இசைக் கலைஞர் ஆக வேண்டும் என்பது கனவு. விபத்தொன்றில், ஜூலியுடன் (பிரியா ஆனந்த்) நட்பாகி, அவரின் உணவகத்திலேயே பியானோ இசைக்கும் பணிக்குச் செல்கிறார். இந்நிலையில், அவ்வுணவகத்தின் வாடிக்கையாளரும் தமிழ் சினிமாவின் முன்னாள் கதாநாயகருமான கார்த்திக்கிற்கு (கார்த்திக்), கிருஷ்ணாவின் இசை திறன் பிடித்துப்போகிறது. அதனால், தன் திருமண நாளன்று தன் மனைவி சிமி (சிம்ரன்) முன்பு பிரத்யேகமாக இசைக்க வேண்டும் என்று கிருஷ்ணாவிடம் கோரிக்கை வைக்கிறார். கார்த்திக்கின் அழைப்பை ஏற்று, அவரின் வீட்டுக்குச் செல்லும் கிருஷ்ணா, அங்கே ஒரு பெரிய பிரச்னையில் தேவையில்லாமல் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தப்பிக்க கிருஷ்ணா எடுக்கும் முயற்சிகள் என்னென்ன, கிருஷ்ணாவுக்குள் புதைந்திருக்கும் ‘ரகசியம்’ என்ன என்பதைப் பேசுகிறது இயக்குநர் தியாகராஜனின் ‘அந்தகன்’.
பார்வை சவால் மாற்றுத்திறனாளிக்கான உடல்மொழியை உண்மைக்கு நெருக்கமாகவே கொண்டுவந்திருக்கிறார் பிரஷாந்த். எமோஷன், ஆக்ஷன், காதல், வஞ்சம் என எல்லா மோடிலும், தன் கதாபாத்திரத்தின் மீட்டர் மீறாமல் நடித்து, அக்கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். வெல்கம் பேக் டாப் ஸ்டார்!
வில்லத்தனத்தில் மட்டுமில்லாமல் எமோஷனலான தருணங்களையும் சிறப்பாகக் கையாண்டு, திரையில் தனித்து நிற்கிறார் சிம்ரன். இவர்களுக்கிடையே சமுத்திரக்கனி மிரட்டும் உடல்மொழியோடு வில்லத்தனத்தையும், பயத்தில் நடுங்கும் உடல்மொழியில் சிரிப்பையும் குறைவின்றி கடத்தியிருக்கிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும், தன் வசீகரமான நடிப்பால் மனதில் நிற்கிறார் கார்த்திக்.
கதாநாயகனின் காதலியாகத் துள்ளிக்குதித்துக்கொண்டே இருக்கும் பிரியா ஆனந்த், பெரிய அழுத்தத்தையும் தராமல், பாதகமாகவும் இல்லாமல் வந்து போகிறார். தன் மிகை நடிப்பையும் மீறிச் சில காட்சிகளை ஒற்றையாளாகக் கைபற்றி சிரிக்க வைக்கிறார் ஊர்வசி. அவருக்குத் துணையாக வரும் யோகி பாபு ஒரு சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் தேவையான பங்களிப்பைத் தர, மறைந்த மனோபாலா இறுக்கமான இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
ஒரு சஸ்பென்ஸ் படத்திற்குத் தேவையான பங்களிப்பை ‘மட்டுமே’ ரவி யாதவின் ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் அவசர அவசரமாக ஓடவிட்டிருக்கிறது சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு. சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘என் காதலும்’ பாடலும், ‘கண்ணிலே’ பாடலும் மட்டும் இதம் தருகின்றன. மற்றவை ‘ப்ச்’! ஒரு பியானோ கலைஞரையும், பியானோ தொடர்பான முக்கியக் காட்சிகளையும் கொண்ட திரைப்படத்திற்கு, பிலோ ஆவரேஜான பின்னணி இசையைத் தந்திருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் பியானோவின் பின்னணி இசை அழுத்தம் சேர்த்திருக்கிறது.
ஆயுஷ்மான் குரானா நடிப்பில், ஶ்ரீராம் ராகவன் எழுதி, இயக்கிப் பெரு வெற்றிபெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் மறு ஆக்கத்திற்கான முயற்சியில் கௌரவமான வெற்றியைப் பெற்றிருக்கிறது தியாகராஜனின் இயக்கம். இதற்கு ஶ்ரீராம் ராகவன் – தியாகராஜன் – பட்டுக்கோட்டை பிரபாகர் கூட்டணியின் எழுத்து உறுதுணையாக இருந்திருக்கிறது. கச்சிதமான படத்தொகுப்பில்லாததால், போதுமான நிதானத்தோடு நகராமல் கடகடவென ஓடுகிறது தொடக்கக் கட்டத் திரைக்கதை. அதனால், ஒவ்வொரு காட்சிகளிலும், செயற்கைத்தனம் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது. பியானோவிற்குச் சம்பந்தமே இல்லாத பாடல்களும் தொந்தரவு செய்கின்றன.
கதையின் மையத்தைத் தொட்ட பிறகு, இந்த ‘அவசர கதி’ கதைசொல்லலின் பிரச்னைகளையும் தாண்டி, விறுவிறுவென நகரும் திரைக்கதையும், நடிகர்களின் பங்களிப்பும் பார்வையாளர்களைத் திரையோடு இணைக்கின்றன. இறுதிக்காட்சி வரைக்குமான அடுக்கடுக்கான ட்விஸ்ட்களும், அவற்றை நேர்த்தியாக அவிழ்த்த விதமும் ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அனுபவத்தைத் தருகின்றன. இறுதிக்காட்சியில் தத்துவார்த்த ரீதியிலான உரையாடல்களைத் திணித்து வகுப்பெடுக்காமல், அவற்றைச் சில வசனங்களிலும், சில ஷாட்களிலும் சொல்லி நகர்கிறது திரைக்கதை.
நடிகர் கார்த்திக்கின் பாடல்களையும், படங்களையும் கச்சிதமாகப் பயன்படுத்தியதால், அவர் தொடர்பான காட்சிகள் ‘நாஸ்டால்ஜியா’ அனுபவமாக க்ளிக் ஆகியிருக்கின்றன. அதேநேரம், தனித்துவமும் அழுத்தமும் கொண்ட திரைமொழியும் நிதானமும் மிஸ் ஆவதால், போதுமான இறுக்கமும் உயிர்ப்பும் அக்காட்சிகளில் மிஸ் ஆகின்றன. இக்குறைகளை நடிகர்களே போராடி வெல்ல முயற்சி செய்கிறார்கள்.
குறைகளைத் தாண்டி, விறுவிறுப்பான திரைக்கதையாலும், நடிகர்களின் நடிப்பாலும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகத் தப்பிக்கிறார் இந்த `அந்தகன்’.