“வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்க” – புதிய அரசுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான புதிய அரசுக்கு இந்திய பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ள பேராசிரியர் முகம்மது யூனுஸுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், ஒரு விரைவான இயல்புநிலையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான நமது இரு நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

— Narendra Modi (@narendramodi) August 8, 2024

வங்கதேச தலைநகர் டாக்காவில் லட்சக்கணக்கான மாணவர்கள், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கும் நடவடிக்கையில் இறங்கிய ராணுவத் தளபதி வாக்கர் உஸ் ஜமான், மாணவர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க வேண்டும் என மாணவர்கள் அமைப்பினர் விரும்பினர்.

ஒலிம்பிக் விளையாட்டை பார்வையிட பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றிருந்த யூனுஸ் மாணவர்கள் அழைப்பை ஏற்று வங்கதேசம் திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான பங்காபாபனுக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார். அவருக்கு அதிபர் முகமது ஷகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.