கிரீமிலேயர் விவகாரம்: பாஜக எஸ்சி, எஸ்டி எம்பிக்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: கிரீமிலேயர் விவகாரம் தொடர்பாகபாஜகவின் எஸ்சி, எஸ்டி எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில், 4 நீதிபதிகள் பட்டியலின (எஸ்சி), பழங்குடி (எஸ்டி)பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்று கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “தற்போது ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே கிரீமிலேயர் நடைமுறை அமலில் உள்ளது. இதனைஎஸ்சி, எஸ்டி பிரிவிலும் அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து தொடர்பாக பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “எம்பிக்கள் குழுவைசந்தித்தேன். எஸ்சி, எஸ்டி சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியேற்று உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்பி சிக்கந்தர் குமார் நிருபர்களிடம் கூறும்போது, “உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த 100 எம்பிக்கள் பிரதமர்நரேந்திர மோடியை சந்தித்து பேசினோம். எங்களது கருத்துகள்,கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதி அளித்தார்” என்று தெரிவித்தார்.

கிரீமிலேயர் நடைமுறை: பாஜக எம்பி பாகன் சிங் குலஸ்தே கூறும்போது, “எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமிலேயரை அமல்படுத்தக்கூடாது என்ற எங்களது கோரிக்கையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.