பாக்தாத்,
மேற்காசிய நாடான ஈராக்கில், தற்போது திருமண வயது, 18 ஆக உள்ளது. இதை, பெண்ணுக்கு 9 ஆகவும், ஆணுக்கு, 15 ஆகவும் குறைத்து, ஈராக் நாடாளுமன்றத்தில், அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் மசோதா தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய மசோதாவில், குடும்ப விவகாரங்களில் முடிவெடுக்க, மத போதகர்கள் அல்லது நீதித்துறையை தேர்வு செய்ய குடிமக்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அங்கு 9 வயது சிறுமியும், 15 வயது சிறுவனும் சட்டப் பூர்வமாக திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மதச்சட்டத்தை தரப்படுத்தவும் தகாதஉறவுகளிலிருந்து இளம் பெண்களை பாதுகாக்கவும் திருமண வயது குறித்த புதிய மசோதா முயல்வதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த மசோதா குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் என்றும்; குடும்ப விவகாரங்களில் நீதிமன்ற அதிகாரத்தை குறைத்து மதகுருமார்களின் கைஓங்கச் செய்யும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதனால் பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்று ஈராக்கை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம், இளவயதில் கர்ப்பம் தரித்தல், குடும்ப வன்முறை அதிகரிக்கும் ஆபத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.