மதுரை: மதுரையில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) வெளுத்துக் கட்டிய கடும் மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு நாள் சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மதுரை மாநகர் பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கனமழை கொட்டியது. மதுரை அண்ணாநகர், ஆட்சியர் அலுவலகம் , கோரிப்பாளையம் , மாட்டுத்தாவணி, சிம்மக்கல் , ரயில்வே நிலையம், கோமதிபுரம், அனுப்பானடி, ஆரப்பாளையம், கலைநகர், ஆனையூர், வள்ளுவர் காலனி , திருப்பரங்குன்றம், சிக்கந்தர்சாவடி கோவில்பாப்பாகுடி அதலை, பழங்காநத்தம், மாடக்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் முக்கிய போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் ஆங்காங்கே வாகனங்கள் மெதுவாக சென்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதிச்சியம், கரும்பாலை, மேலவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக தாழ்வாக இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.சில சாலைகளில் வாகனங்கள் நீந்திச் சென்றன. கனமழையால் மாமதுரை நிகழ்ச்சிகள் நடைபெற்ற தமுக்கம் மைதானம், காந்தி அருங்காட்சியக பகுதிகளில் நடத்திய நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன. நகர், புறநகர் பகுதியிலுள்ள நீர்நிலைகளிலும் ஓரளவுக்கு தண்ணீர் தேங்கியது.