தேர்தல் ஆணையளர் கடந்த 26 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் எவ்வித ஆசிரியர் ஆட்சேர்ப்புகளும் இடம்பெறவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர் நிலையைக் கட்டளை 27(02) இன் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதில் அளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர்,
அரசாங்கம் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
மேலும் “அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக 15 மாதங்கள் தாமதமானமை கல்வி அமைச்சின் தவறல்ல. அமைச்சின் ஆசிரியர் சேவை விதிகளுக்கு இணங்க சரியான முறையில் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக நான்கு தரப்பினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
2019இல் பட்டதாரிகள் 52,000 பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டனர். அவர்களில் 23,000 பேர் பயிற்சிகளுக்காக பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தொடர்பாக 15 மாதங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. அதில் 16,000 பேர் உள்ளார்கள். மேலும் 23,000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி அடைந்துள்ளன. அடுத்த வழக்கு செப்டம்பர் நான்காம் திகதி விசாரணைக் எடுக்கப்படவுள்ளது. அதன் போது அமைச்சரவைப் பத்திரத்தை அங்கீகரித்துக் கொள்ள முடியும் “ எனக் கல்வி அமைச்சர் தெளிவு படுத்தினார்.