“உரப்பயன்பாட்டை குறைக்கும் நெல் ரகம்…" இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

இந்திய விஞ்ஞானிகள், உரப் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கும், வருமானத்துக்கும் பயன்தரக்கூடிய நெல் வகைகளை கண்டறிந்துள்ளனர்.

இந்திய விஞ்ஞானிகள் நெல்லில் நைட்ரஜன் பயன்பாட்டுத் திறன் (Nitrogen Use Efficiency- NUE) தொடர்புடைய பண்புகள் மற்றும் மரபணுக்களில் இயற்கை மாறுபாடுகளைக் கொண்ட நெல் ரகத்தை கண்டறிந்துள்ளதாக ஜர்னல் ஆஃப் பிளான்ட் குரோவ்த் ரெகுலேஷன் (Journal of Plant Growth Regulation) இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நெல்

அதிக நைட்ரஜன் பயன்பாட்டுத் திறன் கொண்ட நெல் ரகங்களான கிரா (Khira) மற்றும் சி.ஆர் தன் 301(CR Dhan 301) ஆகியவை நீண்ட காலப் பயிர்களாகும். எனினும், தல ஹீரா (Dhala Heera) என்ற நெல் ரகம் அதிக நைட்ரஜன் பயன்பாட்டுத்திறன் மற்றும் குறுகிய கால வளர்ச்சியைக் கொண்டுள்ளது; இது விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க பலனைத் தரும் என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்திரபிரஸ்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, பல்வேறு நெல் ரகங்களில் உள்ள 46 புறத்தோற்ற தகவுகள் மற்றும் உடலியல் அளவுருக்களை ஆய்வு செய்தனர். இந்தியாவில் வெளியிடப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்களிலிருந்து கண்காணிக்கப்பட்ட 12 நெல் வகைகளில், நைட்ரஜன் பயன்பாட்டுத்திறனில் ஐந்து மடங்கு மாறுபாட்டை கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தின.

நெல் உள்ளிட்ட உணவு தானியங்களில் உள்ள நைட்ரஜன் பயன்பாட்டுத்திறன், நீண்ட கால விவசாய நிலைத்தன்மைக்கு முக்கியமான காரணியாகும்.

உரம்

மோசமான நைட்ரஜன் பயன்பாட்டுத்திறன் உள்ள உரமானது இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் கோடியையும், உலகளவில் 170 பில்லியன் டாலர் மதிப்புள்ள நைட்ரஜன் உரங்களையும் வீணடிக்கிறது. அத்துடன் இது கடந்த 50 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

ஆய்வகத்திலிருந்து பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் பசுமை இல்ல நிலைகளில் மதிப்பிடப்பட்ட 34 நெல் வகைகளின் வெவ்வேறு தொகுப்புகளைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பசுமை இல்ல நிலைகளில் அதிக நைட்ரஜன் பயன்பாட்டுத்திறன் என அடையாளம் காணப்பட்ட வகைகள், பின்னர் வேளாண் நிறுவன அமைப்புகளால் களச் சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டன.

நைட்ரஜன் பயன்பாடு தீவிர சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நைட்ரஜன் உரங்கள் நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட தீவிர பசுமை இல்ல வாயுவை வெளியேற்றி, சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பங்களிப்பு செய்கிறது. நீர்நிலைகளில் நைட்ரஜன் கலப்பதால் தண்ணீரில் ஆக்ஸிஜன் குறைப்புக்கு வழிவகுக்கிறது; நீர்வாழ் உயிரினங்களை இது கடுமையாக பாதிக்கிறது.

நெல்

இச்சூழலில், அரிசியில் நைட்ரஜன் பயன்பாட்டு திறனை மேம்படுத்துவது இந்த சிக்கல்களைத் தணிக்கும்; நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கும் என்கின்றனர் விவசாய ஆராய்ச்சியாளர்கள்.

இந்தியாவில், மக்கள்தொகையில் பெரும்பாலானோர், தங்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். எனவே, நைட்ரஜன் பயன்பாட்டு திறனை மேம்படுத்துவது, விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரிக்கும் என்று கூறலாம்.

அதிக உரமிடுவதற்கான தேவையைக் குறைப்பதன் மூலம், விவசாயிகள் தங்கள் இடுபொருள் செலவைக் குறைப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.