லண்டன்: கடந்த 2003-ம் ஆண்டில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ மலிக்சன் என்பவர் பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு அவர் நிரபராதி என்பது நிரூபணமானது. இதையடுத்து, செய்யாத குற்றத்துக்காக 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த தனக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரி வழக்குத் தொடுத்தார். இரண்டாண்டுகள் சட்ட போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு நஷ்ட ஈடு வழங்க பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், நஷ்ட ஈடு தொகையிலிருந்து சிறையில் வழங்கிய உண்டு-உறைவிடத்துக்கான செலவு கழிக்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆண்ட்ரூ மலிக்சன் சிறையில் கழித்த 17 ஆண்டுகளில் அவருக்கு அளிக்கப்பட்ட உணவு, அவர் உறங்க வழங்கப்பட்ட படுக்கை ஆகியவற்றுக்கு இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 6 லட்சம் (1 லட்சம் பவுண்ட்) கழிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதால் ஆண்ட்ரூ மலிக்சன் பெருத்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்.
செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்தது மட்டுமில்லாமல் தற்போது தனக்கான நஷ்ட ஈடு தொகையிலிருந்து பெரும்பகுதி மறுக்கப்படுவது ஏற்க முடியாத அநீதி என்று இந்த உத்தரவை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.