வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ம் தேதி பெய்த கனமழையால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தன. காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வயநாடு சம்பவம் குறித்து, கடந்த ஜூலை 31-ம் தேதி தன் எக்ஸ் பக்கத்தில் வருத்தத்தைப் பதிவு செய்த தொழிலதிபர் அதானி, “வயநாட்டில் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான உயிரிழப்புகளுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நினைத்து என் மனம் துடிக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் அதானி குழுமம் கேரளத்துடன் துணை நிற்கிறது. கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம்” என்று பதிவிட்டார்.
இந்நிலையில், அதானி உறுதியளித்தபடி, ரூ.5 கோடி நிதியுதவி கேரள முதல்வரிடம் நேரடியாக வழங்கப்பட்டது என்று அதானி குழுமம் பதிவிட்டுள்ளது.