ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் (22), தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரசு வேலையை நிராகரித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள். ஏற்கனவே, 10 மீ ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்ற மனுவுக்கு இது ஒரே ஒலிம்பிக்கில் இரண்டாவது பதக்கம். இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கும் இவர்களுக்கப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங்கை கெளரவிக்கும் விதமாக, பஞ்சாப் அரசு அவருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் துப்பாக்கி சுடுதலில் இன்னும் சாதனைகள் படைக்க வேண்டும், தனது கனவுகளில் கவனம் செலுத்தி அதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று தனக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை நிராகரித்திருக்கிறார் சரப்ஜோத் சிங்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் சரப்ஜோத் சிங், “அரசு கொடுத்திருக்கும் வேலை நல்ல வேலைதான். என் குடும்பத்தினரும் நான் ஒரு அரசு வேலைக்குச் செல்ல வேண்டுமென்றே கனவு கண்டார்கள். ஆனால், எனக்குத் துப்பாக்கிச் சுடுதல் மீதுதான் ஆர்வம். அதில் பல சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்பதுதான் என் கனவு.
அதற்காக நான் நிறைய பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அரசு வேலையில் கவனம் செலுத்தினால், என்னால் என் கனவை நோக்கிப் பயணிக்க முடியாது. அதை நோக்கித்தான் இத்தனை நாள்கள் பயணித்திருக்கிறேன். என் கனவை நானே சிதைக்க விரும்பவில்லை. அதனால், என்னால் இப்போதைக்கு அரசு வழங்கிய பணியைச் செய்ய முடியாது. இதன் காரணமகாவே இதை நிராகரித்தேன்” என்று கூறியிருக்கிறார்.