நடப்பு பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய லுவானா அலோன்சோ என்கிற வீராங்கனை ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
வயதான நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ, பராகுவே நாட்டைச் சேர்ந்தவர். பட்டர்ஃபிளை ஸ்ட்ரோக் நீச்சலில் ஆர்வம் கொண்ட இவர், இதில் தேசிய அளவில் பல சாதனைகள் படைத்திருக்கிறார். 2020ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்த லுவானா அலோன்சோ, 28 வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். இந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று தகுதிச் சுற்றில் 6-வது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய லுவானா அலோன்சோவை ஒலிம்பிக்ஸ் கிராமத்திலிருந்து வெளியேற்றியது ஒலிம்பிக்ஸ் அமைப்பு. கவர்ச்சியான உடைகள், பிற விளையாட்டு வீரர்களுடன் பழகுவது போன்ற காரணங்களால் லுவானா அலோன்சோ வெளியேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 20 வயதேயாகும் இளம் வீரரான லுவானா அலோன்சோ தனது சொந்த நாட்டிற்குத் திரும்பியவுடன், தனவு ஓய்வை அறிவித்தார்.
இரண்டு நாள்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் ஒலிம்பிக்ஸில் பேசுபொருளாகியிருந்தது. லுவானா அலோன்சோ பிரபல ஒலிம்பிக் வீரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சமூகவலைதளங்களில் குறுஞ்செய்திகள் அனுபியதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. குறிப்பாக, பிரேஸிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மருக்கு லுவானா அலோன்சோ இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் கசிந்து வந்தன.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் லுவானா அலோன்சோவிடன் கேள்வி எழுப்ப, இதற்குப் பதிலளித்த அவர், “அவர்தான் எனக்கு தனிப்பட்ட முறையில் ரெக்குவஸ்ட் கொடுத்து, குறுஞ்செய்தி அனுப்பினார். இதுபற்றி அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். விரிவாகச் சொல்ல முடியாது. ‘நான் தவறான முறையில் நடந்து கொண்டேன், பிற வீரர்களிடம் பழகினேன்’ என்று என்னைப் பற்றி பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள். அதை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.