சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் நிர்மலா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1,200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமன்றி தர்மபுரி மாவட்டம், நெருப்பூர், நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கி இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இறுதிச்சுற்றில் நிர்மலா பள்ளியும், ஜி.வி தனியார் பள்ளியும் விளையாடின. இதில், முதல் சுற்றில் நிர்மலா பள்ளி மாணவர்கள் சரியான முறையில் விளையாடவில்லை என ஆத்திரமடைந்து, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, விளையாட்டு இடைவெளியின்போது மாணவர்களை தரையில் அமரவைத்து, “நீ என்ன மனுசனா… பொம்பளையா. ஏன்டா கால் வராதவனே… உங்களுக்கு என்னடா ஆச்சு” என்று கடும் வார்த்தைகளால், மாணவர்களைப் பொதுவெளியில் திட்டியிருக்கிறார்.
மேலும், மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்து துன்புறுத்தியிருக்கிறார். இதனை பள்ளி ஆசிரியர்களும், ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கூனிக்குறுகி அமர்ந்து, கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றனர்.
இந்தக் காட்சிகள் கொண்ட வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். சம்பவத்தை வேடிக்கை பார்த்த முன்னாள் மாணவர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தங்களின் பிள்ளைகளை ஆசிரியர் ஒருவர் ஷூ காலால் எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்ததைப் பார்த்த பெற்றோர்கள், ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.