கொளுத்தும் வெயிலில் சிகிச்சைக்கு நடந்து வந்த மாற்றுத்திறனாளி; ஆட்சியர் எடுத்த நடவடிக்கை!

தென்காசி அரசு மருத்துவமனையில் மாதாந்திர மருத்துவ சிகிச்சைக்கு, கொளுத்தும் வெயிலில் நடந்து வந்த மாற்றுத்திறனாளியை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அவரின் கோரிக்கையை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுத்ததுடன், அதிகாரிகளைக் கண்டித்திருக்கிறார்.

என்ன நடந்தது என அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). மாற்றுத்திறனாளி. இவர், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாதாந்திர சிகிச்சைக்காக நேற்று வந்திருந்தார். அப்போது, வாட்டி வதைக்கும் உச்சி வெயிலில் முருகேசன் சிகிச்சைக்காக மிகுந்த சிரமத்துடன் நடந்து வருவதை பார்த்தவர்கள் அவருக்கு உதவ முற்பட்டனர். ஆனால், `ஒவ்வொரு மாதமும் இப்படிதான் சிகிச்சைக்காக வந்துசெல்கிறேன்‌. இது வாடிக்கையான விஷயம் தான்’ என முருகேசன் கூறிச் சென்றிருக்கிறார்.

அந்த நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு திடீரென ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாற்றுத்திறனாளி முருகேசன் நிலைமையைப் பார்த்து அவரிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

விசாரணை

அப்போது பேசிய முருகேசன், `ஆதரவுக்கு யாரும் இல்லாத தனி ஆள் நான். சுரண்டை நகர் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு அலுவலகங்களில் தேவைக்காக வருபவர்களுக்கு மனு எழுதி கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். வேலைக்காகவும், இதர தேவைக்காகவும், தனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் டூவீலர் வழங்கவேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 8 முறை கோரிக்கை மனு அளித்துள்ளேன். ஆனால், அந்த மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆட்சியர் விசாரணை

நீங்களாவது, டூவீலர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் சார்’ என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார் இதனைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், உடனடியாக முருகேசனின் கோரிக்கையை ஏற்று டூவீலர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவமனை நிர்வாகத்தினரை அழைத்துக் கண்டித்த ஆட்சியர், பேட்டரி காரின் மூலமாக முருகேசனை பேருந்துநிலையம் அழைத்துச்செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.

பேட்டரி காரில்..

இதையடுத்து, பேட்டரி கார் வரவழைக்கப்பட்டு அதில் பேருந்து நிலையம் வரைக்கும் முருகேசன் அழைத்துச் செல்லப்பட்டார்” என்றனர். மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோரின் இந்த செயலை நெல்லை பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.