கோர்தா (ஒடிசா): ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்திலுள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் புதிதாக இணைந்த 1,429 அக்னிவீரர்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி பேசியதாவது: 2022-ம் ஆண்டு அக்னிவீரர்கள் திட்டத்தைக் கொண்டு வந்தோம். இதுவரை கடந்த பயிற்சிகளில் மொத்தம் 2,500அக்னிவீரர்கள் தங்களது பயிற்சிகளை முடித்து ராணுவத்தில் இணைந்துள்ளனர். இந்தத் திட்டம் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
தற்போது நான்காவது பேட்ச்சில் 1,429 வீரர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். இதில் 300 பேர் பெண்கள். அக்னிவீரர்கள் மீது நான்அதிக நம்பிக்கை வைத்துள்ளன. பயிற்சி முடித்த வீரர்களை கடற்படை கப்பல்களில் பார்க்கும்போது நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அவர்கள் அதிக உந்துதல், உற்சாகம், நம்பிக்கையுடன் இந்திய கடற்படையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன். ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேவை செய்ய வரும் இளைஞர்களை நான் மனமார வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அக்னிவீரர்கள் திட்டத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டு காலம் ராணுவப் படைகளில் இருப்பர். இதில் 25 சதவீதம் பேர் அடுத்த 15 ஆண்டு காலத்துக்கு ராணுவத்தில், வழக்கமான பணிகளில் சேர்க்கப்படுவர். மற்றவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். 4 ஆண்டு பணி முடித்து வெளியே வரும் அக்னி வீரர்களுக்கு ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதில் அவர்களுக்கு வருமான வரிச்சலுகை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.