தென்காசி: வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வந்த அயலக தமிழர்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனி நாடார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, வருவாய் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அயலக தமிழர் மாணவ, மாணவிகள் 100 பேர் வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார், ஈ.ராஜா, தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது ஆட்சியர் பேசும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காக ‘வேர்களைத் தேடி’ என்ற பண்பாட்டுப் பயணத் திட்டத்தை அறிவித்து, 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தமிழக அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு பண்பாட்டு பயணத்துக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக கடந்த 3.1.2024 அன்று ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 57 இளைஞர்கள் தேர்வாகி சென்னை, தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திர போராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொண்டனர். தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் கலந்துரையாடல்களும் பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டப் பயணமாக தென்ஆப்ரிக்காவில் இருந்து 14 பேர், உகாண்டாவில் இருந்து 3 பேர், குவாடலூப்வில் இருந்து 2 பேர், மார்டினிக்வில் இருந்து 3 பேர், பிஜீயில் இருந்து 12 பேர், இந்தோனேஷியாவில் இருந்து 9 பேர், மொரிஷியஸில் இருந்து 13 பேர், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 பேர், மாலத்தீவில் இருந்து ஒருவர், கனடாவில் இருந்து 9 பேர், மியான்மரில் இருந்து 14 பேர், மலேசியாவில் இருந்து 4 பேர், இலங்கையில் இருந்து 9 பேர், பிரான்ஸில் இருந்து 3 பேர், ஜெர்மனியில் இருந்து ஒரு இளைஞர் என 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு வேர்களைத் தேடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பயணத்தை கடந்த 1.08.2024 அன்று தமிழக முதல்வர் சென்னையில் தொடங்கிவைத்தார்.
செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய, இடங்களுக்கு பயணித்து சென்னைக்கு வரும் 14-ம் தேதி சென்றடைகின்றனர். 15-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
அயலக தமிழிர்கள் குற்றாலம் அருவிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். சித்த மருத்துவம் மற்றும் வர்மக்கலை பற்றிய பயிற்சி பட்டறை வகுப்புகளும் நடத்தப்பட்டன. சென்னையில் உள்ள பெரியார் திடலில் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்” என்றார்.
நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், அயலக தமிழர் நலன் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர்கள் புகழேந்தி, அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.