Keerthy Suresh: "தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரியான படத்தைப் பேச முடியும்"- கீர்த்தி சுரேஷ்

” இந்திக்கு எதிராகப் பேசிவிட்டு இந்தி படத்தில் நடிப்பதாக சிலர் பேசினார்கள். இந்தியை நான் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்புதான் கூடாது என்றேன். எனக்கு இந்தி நன்றாக பேசத் தெரியும்…” என்று நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.

சிறுமிகளுடன் டிரெய்லர் பார்த்த கீர்த்தி சுரேஷ்

கே.ஜி.எஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15 -ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மதுரையில் நடந்த இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படத்தின் டிரெய்லரை சிறுமிகளுடன் பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், “மதுரை எனக்கு ரொம்பப் பிடித்த ஊர். அடிக்கடி வந்துசெல்லும் ஊர். மல்லிகைப் பூ, மீனாட்சியம்மன் கோயில் ரொம்ப பிடிக்கும்.

ரகு தாத்தா அனைவரையும் சிந்திக்க வைக்கக் கூடிய படமாக இருக்கும், இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும். பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களைப் பற்றி நகைச்சுவையாக சொல்லி இருப்போம். ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுகொண்டே குடும்பத்தோடு பார்க்கக்கூடிய இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். பெண்ணுரிமைக்கு போராடக்கூடிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறேன். 1970 – ஆம் காலகட்ட பெண்களின் கதை. பெண்கள் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டு இன்று வரை தொடர்கிறது. அது குறித்து சிறிய வசனங்கள் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

ரகு தாத்தா

இந்தப் படத்தை பார்க்கும்போது கலாசாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் பெண்களிடம் திணிக்கப்படுவது தெரியும். ஆனால் இது எதுவுமே சீரியஸாக இருக்காது காமெடியாக சொல்லியிருப்போம்’ என்றவரிடம், “அரசியலுக்கு வருவீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இப்போதைக்கு நான் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை, நடிப்பில் மட்டும் தான் கவனம். எனக்கு அரசியல் ஆசை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்…” என்றவர்,.

“இந்தி திணிப்பைப் பற்றி பேசுவதற்காக பெண்களைப் பிரதானமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இன்றுவரை இந்திய திணிப்பு என்பதை படமாக எடுத்திருக்க மாட்டார்கள். பெண்கள் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும், இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் எனப் பெண்கள் மீது பல்வேறு விஷயங்கள் திணிக்கப்படுகிறது. கே.ஜி.எஃப், காந்தாரா எடுத்த தயாரிப்பு நிறுவனம் தமிழில் முதன் முதலில் படம் எடுக்க பல விஷயங்களை யோசித்திருப்பார்கள். மொழியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு படத்தைப் பற்றி பேச முடியும். நம் மக்கள்தான் இதைப் புரிந்து கொள்வார்கள். அதனால்தான் ரகு தாத்தா எனப் பெயரைக் குறிப்பிட்டுள்ளோம்.

கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் வித்தியாசமாக யோசித்து இதனை இயக்கியுள்ளார். தமிழில் முதன்முறையாக யாரும் டச் பண்ணாத மொழி தொடர்பான படம். எனக்கு ரொம்ப ஸ்பெஷலான விஷயம். படம் முழுக்க காமெடியாக இருந்தாலும் பெண்களையும் ஆண்களையும் யோசிக்கவும் வைக்கும். யாமினி என்ற பெண் கேமரா மேனாக பணியாற்றியுள்ளார். இந்த ஆண்டுதான் இந்தியில் அட்லீ இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கிறேன். ரகு தாத்தாவில் நடிக்கும்போதே இந்தித் திணிப்பை பற்றி பேசுகிறீர்கள், இந்தி படத்தில் நடிக்கிறீர்கள் என சிலர் கமென்ட் செய்தார்கள். நான் இந்தித் திணிப்பைப் பற்றி மட்டும் தான் பேசினேன். மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் எதைத் திணித்தாலும் அது தப்பான விஷயம்தான். எனக்கு இந்தி நன்கு தெரியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.