பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 4 திருமணம் செய்த குற்றவாளி

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. அதன் கருத்தரங்கு அறையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்த அவர் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்திருக்கிறார். 8-ந்தேதி இரவு பணியில் இருந்தபோது பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து பிற டாக்டர்களும் அந்த குற்றவாளியை அடையாளம் காட்டினர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவ துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இன்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இந்திய டாக்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், 4 முறை திருமணம் ஆனவர் என்பதும் அவர்களில் 3 பேர், அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 4-வது மனைவியும் உயிரிழந்து விட்டார்.

அவர் அடிக்கடி வீட்டுக்கு இரவில் குடிபோதையில் வருவது வழக்கம் என பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை சஞ்சய் ராயின் தாயார் மாலதி ராய் மறுத்துள்ளார். போலீசாரின் நெருக்கடியாலேயே, படுகொலை செய்த விவரங்களை சஞ்சய் ஒப்பு கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், இதற்கு முன் திருமணம் நடந்த விவரங்களை மறைத்து, தன்னுடைய மகளை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டவர் சஞ்சய் என அவருடைய மாமியார் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

அந்த மாணவியின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் ராய் வைக்கப்பட்டு உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.