தலிபான் ஆட்சியில் 3 ஆண்டுகளாகியும் மாறாத ஆப்கானிஸ்தான்! – அதிகரித்துள்ள பொருளாதார சிக்கல்கள்

காபூல்: ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து 3 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆப்கனின் அதிபராக இருந்த அஷ்ரப் கனியை அகற்றிவிட்டு, தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் ஆகஸ்ட் 15, 2021. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த இந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளதாகவும், மக்கள் போதுமான சுதந்திரம் இன்றி நெருக்கடியின் பிடியில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் சுமார் 4 கோடி மக்கள் வாழும் நிலையில் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ரொட்டியும், தேநீரும் மட்டும் உண்டு வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆப்கனில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாக உள்ளதாகவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

அதேநேரத்தில், தலிபான்களின் ஆட்சியில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பணமதிப்பு ஓரளவு தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருப்பதாகவும், ஊழல் எங்கும் இல்லை என்றும், வரி வசூல் மேம்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் அஹ்மத் ஜாஹிட், “பொருளாதார, வணிக, முதலீட்டு உறவுகளை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கனிமங்கள் அதிகம் இருப்பதாகவும், விவசாயமும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் அவற்றை தலிபான் அரசாங்கம் சுரண்ட முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆப்கானியர்கள் தங்கள் வாழ்வில் மேம்பட்ட பாதுகாப்பை வரவேற்றாலும், பலர் தங்கள் வாழ்க்கையை வாழ போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.

தொழிலதிபரின் கருத்து: இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்று ஆப்கனியர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. 54 வயதாகும் தொழிலதிபர் அஜிசுல்லா ரெஹ்மதி, ஹெராட்டின் மேற்கு மாகாணத்தில் குங்குமப்பூ நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் அளித்துள்ள பேட்டியில், “இந்த ஆண்டு உற்பத்தி இரட்டிப்பாக உள்ளது. 2021 வரை, எனது “ரெட் கோல்ட் குங்குமப்பூ நிறுவனம்” தொழிற்சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு பொருட்களை கொண்டு செல்லும்போது ஆயுதமேந்திய காவலர்களை நியமிக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. எனவே, பாதுகாவர்களின் தேவை தற்போது இல்லை. 27 நாடுகளுக்கு நான் ஏற்றுமதி செய்து வருகிறேன்.

பெண்கள் வேலைக்குச் செல்வதில் தலிபான் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் அவர்கள் பணி செய்ய முடியாத நிலை இருந்தாலும் எனது நிறுவனத்தில் 50% பேர் பெண்கள். வங்கித்துறை முடங்கி இருப்பதுதான் எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

அதோடு, ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து பல வெளிநாடுகள் தங்கள் தூதரகங்களை மூடிவிட்டன. ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டுகளுக்கு மதிப்பு இல்லை. இதனால், வெளிநாட்டு பயணங்களுக்கு விசா பெறுவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் நாங்கள் பின் தங்கி உள்ளோம்” என்று ரெஹ்மதி தெரிவித்துள்ளார்.

இசை கலைஞரின் கருத்து: “தலிபான் அரசாங்கம் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது. இசை இஸ்லாத்திற்கு எதிரானது என்று அரசு கருதுகிறது. இதனால் இசை துறையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நானும் இப்போது வேலையில்லாமல் இருக்கிறேன். ஆனாலும் தற்போது நான் வாகன ஓட்டுநராக உள்ளேன். மாதம் 5,000 ஆப்கானிஸ் ($70) சம்பாதிக்கிறேன். இது எனது கச்சேரிகளின் மூலம் நாம் சம்பாதிக்கும் தொகையில் ஐந்தில் ஒரு பங்குதான். ஆனாலும், ஏழு பேர் கொண்ட எனது குடும்பத்திற்கு உணவளிக்க இது தேவையானதாக இருக்கிறது” என இசைக்கலைஞர் வாஹித் நெக்சாய் லோகாரி தெரிவித்துள்ளார்.

அழகு நிலையம் நடத்தும் பெண்ணின் கருத்து: அழகு நிலையங்களை மூட தலிபான் அரசு உத்தரவிட்டதை அடுத்து காபூலில் அழகு நிலையம் நடத்தி வந்த சயீதா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனினும், தான் தற்போது ரகசியமாக அழகு நிலையத்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். “அழகு நிலையத்துக்கான இந்த இடத்தை நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ளோம். வாடிக்கையாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமான அணுகுமுறையுடன் வருகிறார்கள். எங்கள் ஊழியர்களில் சிலர் இங்கேயே தூங்குகிறார்கள். இதனால் அண்டை வீட்டாரும் இங்கு ஒரு குடும்பம் வாழ்கிறது என்று நினைக்கிறார்கள்.

முன்பு, எங்களுக்கு ஒரு நாளைக்கு 30 முதல் 40 வாடிக்கையாளர்கள் இருந்தனர். இப்போது அது ஆறு அல்லது ஏழு என்று குறைந்துவிட்டது. முன்பு மாதம் 25,000 ஆப்கனிஸ் ஈட்டி வந்தேன். தற்போது 8,000 முதல் 12,000 வரை கிடைக்கிறது. நாங்கள் தலைமறைவாக வேலை செய்கிறோம். இன்னும் எவ்வளவு காலம் என்று எங்களுக்குத் தெரியாது. காவல்துறையினர் கண்டுபிடித்துவிட்டால் உபகரணங்களை உடைத்து, ஊழியர்களை தவறாக நடத்துவார்கள். அபராதமும் விதிப்பார்கள்” என சயீதா அச்சம் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.