கும்பகோணம்: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்தை பராமரித்து வரும் அசோக் குமாருக்கு தமிழகத்தின் சிறந்த யானைப் பாகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய யானைகள் நலவாழ்வு மையம் என்ற அமைப்பு தென்னிந்தியா முழுவதும் பல மாநிலங்களில் யானைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த யானைப் பாகன்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் சிறந்த யானைப் பாகனுக்கான விருது, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்தை பராமரித்து வரும் யானைப் பாகன் அசோக் குமாருக்கு வழங்கப்பட்டது.
யானைகளை முறையாக பராமரித்தல், யானைகளுக்கு தேவையான உணவு வழங்குதல், உடற்பயிற்சி கொடுப்பது, யானையோடு பழகும் விதம், யானைக்கும் பாகனுக்கும் இடையேயான புரிதல் உள்ளிட்ட பல்வேறு கூறுகளின் அடிப்படையில் சிறந்த யானைப் பாகன்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மங்களம் யானையை பராமரித்து வரும் பாகன் அசோக்குமார் தென்னிந்திய அளவில் நான்காவது இடத்திலும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று விருதை தட்டிச் சென்றுள்ளார். விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.
இதில் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், தென்னிந்திய யானைகள் நல வாழ்வு மைய நிர்வாகிகள் அஜித் குமார், சுதன் மற்றும் கோயில் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு அசோக்குமாருக்கு விருது மற்றும் சான்றிதழை வழங்கி கவுரவித்தனர். முன்னதாக, யானை மங்களத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர் தூவி, தீபாரதனை காண்பிக்கப்பட்டு பழங்கள் உணவாக கொடுக்கப்பட்டது.