Doctor Vikatan: படுத்தும் வயிற்றுக் கோளாறுகள்; மனதில்தான் பிரச்னை என்கிறார் மருத்துவர்… உண்மையா?

Doctor Vikatan: எனக்கு வயது 34. எப்போதும் வயிறு தொடர்பாக ஏதோ ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் உணர்வு, வயிற்று உப்புசம் என ஏதோ ஒன்றை உணர்கிறேன். மருத்துவரைப் பார்த்து எல்லா டெஸ்ட்டுகளையும் செய்து பார்த்துவிட்டேன். எனக்கிருக்கும் பெரும்பாலான பிரச்னைகள் மனம் சம்பந்தப்பட்டவை என்கிறார்.  வயிற்றுக்கோளாறுகளுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டா… செரிமானத்துக்காக  அடிக்கடி பீடா சாப்பிடுகிறேன். அது சரியா….என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா.

வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா

உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொன்னது உண்மைதான். உடலை வருத்தும் எல்லாப் பிரச்னைகளுக்கும் மனதுடனும் தொடர்புண்டு.  குறிப்பாக,  வயிறு மற்றும் இரைப்பை தொடர்பான பல பிரச்னைகள் மனம் சம்பந்தப்பட்டவை. அவற்றை ‘ஃபங்ஷனல் பவல் டிஸ்ஆர்டர்ஸ்’ (Functional bowel disorders) என்று சொல்கிறோம். அதற்காக  வயிறு தொடர்பான எல்லா பிரச்னைகளுமே மனம் சம்பந்தப்பட்டவையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருவதும் ஆபத்தானது. அதை குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரால்தான் கண்டுபிடித்து உறுதிசெய்ய முடியும்.

உதாரணத்துக்கு, பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு, பரீட்சை நேரத்தில் வயிறு கலக்கும், அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதற்கு முக்கிய காரணமே பரீட்சை குறித்த பயமும் கவலையும்தான். வேலைக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கும் சிலருக்கும் வேலைநாள்களில் இந்த உணர்வு ஏற்படும். அதுவே விடுமுறை நாள்களில் நார்மலாக இருப்பார்கள்.  டூர் போகும்போது பிரச்னை இருக்காது. ஊருக்குத் திரும்பியதும் மறுபடி அதே பிரச்னைகள் ஆரம்பமாகும். வேலையிடம், சக ஊழியர்கள் குறித்த கவலை, ஸ்ட்ரெஸ் போன்றவைதான் இதற்கு காரணம். 

இதயம் எப்படி 24 மணி நேரமும் துடித்துக்கொண்டே இருக்குமோ, குடலும் 24 மணி நேரமும் அசைந்துகொண்டே இருக்கும். இந்த அசைவு சீராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போகும்போதுதான் வயிற்றுவலி, உப்புசம் போன்றவை ஏற்படுகின்றன. கவலைக்கும் மன அழுத்தத்துக்கும் இவற்றுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.  குறிப்பிட்ட பரிசோதனைகளைச் செய்து மருத்துவர்கள் இதை உறுதிசெய்வார்கள். பதற்றத்துக்கு சிகிச்சை அளித்தாலே இந்தப் பிரச்னைகள் சரியாகும்.

வயிற்றுக் கோளாறுகள்

செரிமானத்துக்காக பீடா மெல்லுவதும், ஆன்டாசிட் மருந்துகள் எடுத்துக்கொள்வதும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். வேளா வேளைக்கு, சத்தான, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவோருக்கு குடல், இரைப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. அந்த ஒழுக்கம் மீறப்படும்போதுதான் செரிமான பாதிப்புகள் வருகின்றன.  பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயு வெளியேறுவது, வயிற்றுப்போக்கு என செரிமானம் தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தக்கூடாது. உங்கள் மருத்துவர் அறிவுறுத்தும் விஷயங்களைப் பின்பற்றிப் பாருங்கள். அவற்றில் நிவாரணம் தெரியாத பட்சத்தில், அடுத்தகட்ட சிகிச்சை பற்றி யோசிக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.