லாகூர்,
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் (ISI) முன்னாள் தலைவர் ஹபீஸ் ஹமீது. இவர் 2019 முதல் 2021 வரை உளவு அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தார்.
இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது உளவு அமைப்பின் தலைவராக இருந்த ஆசிம் முனீரை பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹபீஸ் ஹமீதுவை தலைவராக்கினார். அதேவேளை, ஆசிம் முனீர் 2022ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். பின்னர், இம்ரான்கானின் ஆட்சி கலைக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஷபாஸ் அகமது பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்றார்.
இதனிடையே, ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக இருந்த ஹபீஸ் ஹமீது 2022ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதேவேளை, குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஊழல் வழக்கில் ஹபீஸ் ஹமீது மீது 2023ம் ஆண்டு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக ஹமீது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஹபீஸ் ஹமீதுவை பாகிஸ்தான் ராணுவம் இன்று கைது செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பெயரில் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஹபீஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஹமீது மீது ராணுவ கோர்ட்டில் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.