பாட்னா: பிஹார் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயமடைந்துள்ளனர்.
பிஹார் மாநிலம் ஜஹானா பாத் மாவட்டம் மக்தும்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபா சித்தேஷ்வர்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த புகழ்பெற்ற பாபா சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஆண்டுதோறும் புனித சிராவண மாதத்தில் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தத் திருவிழாவைக் காண பக்தர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் முதலேகோயில் வளாகத்தில் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கோயில் வளாகத்தில் அமைந்திருந்த பூக்கடையில் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குவாதம் சண்டையாக மாறியது. ஏராளமானோர் அப்பகுதியில் கூடி சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த தன்னார்வலர்கள், கூட்டத்தினர் மீது லேசாக தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கோயிலில் இருந்த பக்தர்ஒருவர் கூறும்போது, “கோயில் வளாகத்தில் இருந்த பூ விற்பனையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியது. இந்த சண்டையில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க தன்னார்வலர்கள் தடியடி நடத்தினர்.
இதுவே கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது, அப்போது கோயில் நிர்வாகத்தினர் யாரும் இல்லை. போலீஸார் மற்றும் கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்தது’’ என்றார்.
இதுகுறித்து ஜஹானாபாத் மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே கூறும்போது, “தற்போது கோயிலில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நெரிசலில் சிக்கி 7 பேர் இறந்துள்ளனர். இவர்கள் 7 பேருமே கன்வர் யாத்திரையில் ஈடுபட்டவர்கள். இறந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.