`கூழாங்கல்’ திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து ‘கொட்டுக்காளி’ படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். சாதி, ஆணாதிக்கத்தைப் பற்றி பேசியிருக்கிற இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. சென்னையில் நடைபெற்ற இதன் டிரெய்லர் விளையாட்டு விழாவில் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இவ்விழாவில் இயக்குநர் வினோத்ராஜ் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் சிவகார்த்திகேயன், “நான் ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். ‘மாவீரன்’ படத்தோட தயாரிப்பாளர் அருண் விஷ்வாதான் எனக்கு அந்த படத்தை அறிமுகப்படுத்தினாரு. ‘கூழாங்கல்’ படத்தை என்னால புரிஞ்சுக்க கஷ்டமாக இருந்துச்சு. நான் உலக சினிமாவெல்லாம் பெருசா பார்த்தது கிடையாது. வினோத் ராஜ் ரோட்டர்டேம் விழாவுல விருதெல்லாம் வாங்கியிருக்காரு. அதுக்கு பிறகு அவர் வாங்கின விருதுகள் பத்திச் சொன்னாங்க. ஒரு திரைப்பட விழாவுல சிறந்த அறிமுக இயக்குநருக்கு கொடுக்கக்கூடிய விருதை வினோத் ராஜ் வாங்கியிருக்காரு. அந்த விருதை இதுக்கு முன்னாடி இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் வாங்கியிருக்காரு.
அதுக்குப் பிறகு அவரோட அடுத்த படத்தை நான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணேன். கதையைத் தாண்டி இப்படியான மனிதரை நான் கொண்டாடணும்னுதான் இந்த படத்தைத் தயாரிச்சேன். சினிமாவுல பணத்தை போட்டா சம்பாதிக்கணும். அதுதான் முதல் எண்ணம். ஆனா, நீங்க என்னை நடிகனாக்கி எனக்குனு ஒரு இடத்தை உருவாக்கி கொடுத்திருக்கீங்க. அதுல கிடைக்கிற பணத்தை நான் இங்க செலவு பண்றேன்.
‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துட்டு இயக்குநர் புஷ்கர் காயத்ரி என்கிட்ட ‘ இது நீங்க சினிமாவுக்கு பண்ற சேவை’னு சொன்னாங்க. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யாரும் கிடையாதுனு வினோத் ராஜ் என்கிட்ட சொன்னாரு. மேலும், ‘மியூசிக் இல்லாம படத்துல இருக்கிற கதாபாத்திரங்களோட உணர்வை பார்வையாளர்களுக்கு உணர வைக்கணும்’னு வினோத் ராஜ் கூறினார். இந்தப் படம் தியேட்டர்ல ஓடி எவ்வளவு வசூல் பண்ணினாலும் எனக்கு சந்தோஷம்தான். சினிமாவை மாற்றப்போகும் நபர்தான் வினோத் ராஜ். குறிப்பாக இந்த படத்தோட முதல் காட்சியை எப்படி இயக்குநர் எடுத்தார்னு தெரில.
ஒரு கிராமத்தையே முழுமையாகக் கட்டுப்படுத்தி எடுத்திருக்காரு. சூரி அண்ணன் காமெடி, ஹீரோ தாண்டி ஒரு அற்புதமான நடிகர். விடுதலை அவருக்கு முக்கியமான படமாக அமைஞ்சது. நான் கொட்டுக்காளி படத்தோட சில காட்சிகள் பார்த்ததும் விடுதலை படத்தைவிட இந்த படத்துக்காக எக்ஸ்ட்ரா நடிப்புல ஒரு மார்க் சூரி அண்ணன் வாங்கிடுவார்னு சொன்னேன். சூரி அண்ணனுக்கு கருடன் திரைப்படமும் சூப்பர் ஹிட். விக்ரம் சாருக்கு எப்படி 2003-ம் ஆண்டு தூள், சாமி, பிதாமகன் போன்ற மூன்று திரைப்படங்களும் ஹிட்டாகி சூப்பரான வருடமாக அமைஞ்சதோ அதே மாதிரி சூரி அண்ணனுக்கு இந்த வருடம் அமையும். அடுத்தடுத்து சூரி அண்ணன் மிஷ்கின் சார் இயக்கத்திலேயும் நடிக்கணும்.
இந்தப் படத்துக்கு சூரி அண்ணனுக்கு தேசிய விருது கிடைச்சா நல்லா இருக்கும். கொஞ்சம் மிஸ்ஸானாலும் வெற்றி மாறன் சார் இருக்காரு. விடுதலை படத்துக்கு அவர் வாங்கிக் கொடுத்திடுவார். என்னைக்குமே என் அண்ணன் சூரி ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி. இயக்குநர் வினோத் ராஜ் ஒரு பெருமை. வினோத் ராஜ் இந்த படத்துல அரசியல் பேசியிருக்காரு. ஆனா, எதையும் திணிக்காம சொல்லியிருக்காரு.
யாரையும் கண்டுபிடித்து இவங்களுக்கு நான் தான் வாழ்க்கைக் கொடுத்தேன், நான் ரெடி பண்ணேன் என்றெல்லாம் நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். ‘நான் வாழ்க்கைக் கொடுத்தேன்’ என எனக்குச் சொல்லி சொல்லி பழகப்படுத்திவிட்டனர். அப்படியெல்லாம் பேசுகிற ஆள நாளில்லை. திறமையாளர்களை உங்களுக்கு என் நண்பர்களைப் போல அறிமுகப்படுத்தி வைக்கிறேன், அவ்வளவுதான். நீங்கள் கொடுத்த இந்த நடிகர் என்ற அஸ்தஸ்த்தை வைத்து என்னால் என்னென்ன நல்லது செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.