`கூழாங்கல்’ திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற திரைப்படம் ‘கொட்டுக்காளி’.
சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இதையொட்டி இன்று நடைபெற்ற இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், வெற்றிமாறன், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ், சூரி குறித்தும் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் குறித்தும் பாராட்டிப் பேசியிருக்கின்றனர்.
இவ்விழாவில் `கொட்டுக்காளி’ திரைப்படத்தின் சிறப்புகள் குறித்தும் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் குறித்தும் பேசியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறன், “ஒரு படம் பிடித்துவிட்டால் மிஷ்கின் கொண்டாடித் தீர்த்துவிடுவார். ரொம்பவும் உணர்ச்சிகரமானவர். பி.எஸ்.வினோத்தை இங்கு கொண்டாடித் தீர்த்திருக்கிறார். பி.எஸ்.வினோத் நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவதற்கு முழுத்தகுதியாக இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இன்றைய தலைமுறையின் முக்கியமான இயக்குநர்.
சிவகார்த்திகேயன், சூரி இருவரும் அவரை இந்த சினிமா வெளிச்சத்திற்குக் கொண்டுவர பெரும் பலமாக இருந்திருக்கிறார்கள். அதேசமயம் பிரபலமாக இருக்கும் இவர்களுடன் பணியாற்றுவது சவாலாகவும் இருந்திருக்கும். வாழ்க்கைகுக் நெருக்கமான இதுபோன்ற கதைகளை எடுக்கும்போது வணிக ரீதியாக இத்திரைப்படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதும் இயக்குநரின் மனதிற்கு நெருக்கமாகவும் எடுக்க வேண்டும் என்பதும் பெரும் சவாலான ஒரு விஷயம். வினோத் எடுத்திருக்கும் இரண்டு திரைப்படங்களுமே உலகளவில் விருதுவிழாக்களில் அங்கீகாரம் பெற்று, கொண்டாடப்பட்ட திரைப்படங்கள்.
‘கொட்டுக்காளி’ பெண்ணியம் சார்ந்த திரைப்படம், சாதியத்திற்கு எதிரான திரைப்படம், ஒரு இலக்கியமாக இருக்கும் திரைப்படம், வணிக ரீதியாக எல்ல தரப்பினரையும் ஈர்க்கும் திரைப்படம்.
இப்படி எல்லா வகையில் சிறப்பாக இருக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் வினோத்ராஜ் எளிமையாக, சாதாரணமாக சாத்தியப்படுத்தி எடுத்திருக்கிறார். அதுவும் பின்னணி இசை இல்லாமல் படத்தை எடுத்திருப்பது இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது. வாழ்க்கைக்கு நெருக்கமான திரைப்படமாக மாற்றியிருக்கிறது. அந்த துணிச்சலுக்காக இயக்குநர் பி.எஸ்.வினோத்திற்குப் பாராட்டுகள்.
சூரி உட்பட எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் பார்க்கும்போது இயக்குநர், நடிகர், ஒளிப்பதிவாளர் என யாரும் தெரியமாட்டார்கள். கதை மட்டுமே நம்மை ஆட்கொண்டிருக்கும். கதையில் வரும் அந்த வாழ்வியல், அதில் இருக்கும் பெண்ணிற்கு என்ன நடக்கப் போகிறது என்கிற சிந்தனை மட்டுமே நமக்குள் இருக்கிறது. நேர்மையாக, எளிமையான சிறந்த படைப்பு இந்த ‘கொட்டுக்காளி'” என்று பாராட்டிப் பேசியிருக்கிறார்.