ஐபிஎல் மெகா ஏலம்… தலைகீழாக மாறும் இந்த 3 அணிகள்… தூக்கியெறியப்படும் வீரர்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2024 தொடர் நிறைவடைந்து முழுதாக  மூன்று மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அடுத்த சீசன் குறித்த ஆர்ப்பரிப்பும், எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது எனலாம். அடுத்த சீசனில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்றால் அது மெகா ஏலம்தான். ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுமே கூட ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்து பேசி வருகின்றனர். ரவிசந்திரன் அஸ்வினும் தனது யூ-ட்யூப் சேனலில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL Mega Auction) குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். 

அந்த வகையில், ஒவ்வொருவருக்கும் ஐபிஎல் 2025 தொடர் மீதான பார்வையும் இருக்கிறது. தோனி (MS Dhoni) விளையாடுவாரா மாட்டாரா, மும்பையில் ஹர்திக் பாண்டியாவா ரோஹித் சர்மாவா என பல கேள்விகளும் அனைவரின் மனதிலும் இருக்கின்றன. 

மெகா ஏலமே ஒரே பதில்

இதற்கு விடை வேண்டுமென்றால் அதையும் மெகா ஏலம்தான் முடிவு செய்யும். எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் (IPL Retention), தக்கவைப்பதில் கொடுக்கப்படும் விதிமுறைகள் உள்ளிட்டவை மெகா ஏலத்திற்கு முன்பு வெளியாகும். இதுவே, தோனி விளையாடுவாரா மாட்டாரா, மும்பை இந்தியன்ஸ் யாரை தக்கவைக்கிறது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். 

இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தால் எந்தெந்த அணிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பது குறித்து இங்கு காணலாம். அனைத்து அணிகளும் யார் யாரை தக்கவைப்பது, விடுவிப்பது போன்றவற்றை மெகா ஏலத்தின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பின்னரே தெரிவிக்கும் என்றாலும் தற்போதைய சுழலில் இந்த மூன்று அணிகள்தான் மெகா ஏலத்திற்கு பின் பெரிய மாற்றத்தை சந்திக்க இருக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ்: தலைகீழ் மாற்றம்

2021ஆம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) கோப்பையை வெல்லவில்லை. ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டன்ஸியில் இருந்து கீழிறக்கப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட்டு, மும்பையில் ரீ-என்ட்ரி கொடுத்தார், அதுவும் கேப்டனாக… ஆனால், மும்பை அணி 2023இல் கடைசி இடத்தைதான் பிடித்தது. 

இதனால், இம்முறை சூர்யகுமார் யாதவ் அணியில் நிச்சயம் கேப்டன் பொறுப்பை பெறுவார். ஜஸ்பிரித் பும்ராவும் அணியில் இருப்பார். ரோஹித் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகியோரில் ஒருவர் நிச்சயம் அணியில் இருப்பார்கள். கேப்டன்ஸி மாற்றம், ரோஹித் அல்லது பாண்டியா ஆகியோரில் ஒருவர் வெளியேறுவது, பயிற்சியாளர் மார்க் பௌச்சர் மீதான அதிருப்தி உள்ளிட்டவற்றால் மும்பை அணி பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: மொத்தமும் மாறுமா?

நடப்பு சாம்பியன் கேகேஆர் (Kolkatta Knight Riders) அந்த கோப்பையை 2025இல் தக்கவைக்குமா என்பது பெரிய கேள்விதான். குறிப்பாக, ஆலோசகர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir), பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் தற்போது இந்திய அணிக்கு வந்துவிட்டதால் அடுத்த சீசனுக்கு இருக்க மாட்டார்கள்.

மேலும், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோரில் ஒருவர்தான் அணியில் நீடிப்பார் எனலாம். மேலும், அந்த அணி வளர்த்தெடுத்த இளம் வீரர்களான வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ரகுவன்ஷி ஆகியோரும் மற்ற அணிகளுக்கு சிதறுவார்கள் என்பதால் சாம்பியன் அணியாக நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான். 

பஞ்சாப் கிங்ஸ்: எப்போதும் மாற்றம்தான்…

மேலே சொன்ன இரண்டு அணிகளும் சாம்பியன் அணிகள். மும்பை 5 முறையும், கொல்கத்தா 3 முறையும் கோப்பைகளை வென்றிருக்கின்றன. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) இன்னும் 1 கோப்பையை கூட வெல்லவில்லை. ஆனால், ஒவ்வொரு மெகா ஏலத்திற்கும் அந்த அணி முற்றிலுமாக மாறுபடும். அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் பதவி விலக அதிக வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது. 

பலமான அணியாக இருந்தும் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் போனது அணி உரிமையாளர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், இந்த அணிக்கு சஞ்சய் பாங்கர் அல்லது வாசிம் ஜாபர் ஆகியோரில் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேப்டன் ஷிகர் தவாண் இந்த அணியால் தக்கவைக்கப்படுவாரா, அல்லது அந்த அணியின் வழக்கம்போல் விடுவிக்கப்பட்டு புதியவர்களை நோக்கி நகர்வார்களா என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும். ஷஷாங்க் சிங், அஷூடோஷ் சர்மாவை இவர்கள் விடமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.