சூரி நடித்திருக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் உலகத்தின் முக்கியமான திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ்.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்களான மிஷ்கின், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், வெற்றி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் லிங்குசாமி ” ‘கொட்டுக்காளி’ படம் பார்த்துட்டு அடுத்த நாள் காலைல ஆபீஸுக்கு வந்ததும் எல்லோரும் தூங்கவே இல்லனு சொன்னாங்க. இந்த படத்தை நான் திரையரங்குகள்ல பார்க்கணும்னு ஆசைப்படுறேன். வினோத் ராஜ் யாரு… அவர் மிஷ்கினா? பாலாஜி சக்திவேலா? வெற்றி மாறானானு பார்க்கும்போது … அவன் யார் மாதிரியும் இல்ல. அவன் தனி ஆள். அவனை மாதிரி யாரும் கிடையாது. ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு மாதிரியான படம் வரும். அதுதான் இந்த ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தை தியேட்டர்ல பார்க்கும்போது சத்தம் போடாதீங்கணு சொல்றதுக்கு நல்ல ரசிகர்கள் இருப்பாங்க.
வினோத் ராஜ் இந்திய சினிமாவின் முக்கியமான நபர். சூரியோட கரியர் விடுதலை திரைப்படம் மூலமாக மாறியிருக்கு. இந்தப் படத்துக்கும் நிச்சயமாக ஓப்பனிங் வரும். புதிய அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு யார்கிட்டயும் கேட்கத் தேவை இல்ல. இந்த படத்தை பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கணும்.” என்றார்.
மேடையேறிய இயக்குநர் மிஷ்கின், ” இந்த படத்துக்கு ‘ The Adament Girl’னு டேக்லைன் போட்டிருக்காங்க. அதுல எனக்கு உடன்பாடு இல்ல. ‘The Adament Society’னு போட்டிருக்கணும். தமிழ் ஆளுமைகள்ல பாலசந்தருக்குப் பிறகு நான் இயக்குநர் வினோத் ராஜை பார்க்குறேன். என்கிட்ட ஒரு வருடத்துல பலர் வந்து உதவி இயக்குநராக சேரணும்னு கேட்கிறாங்க. அவங்ககிட்ட சினிமாவுக்கு எதுக்கு வர்றீங்கனு கேட்பேன். அதுக்கு அவங்க, ‘வாழ்க்கைல சாதிக்கணும்’னு சொல்வாங்க. அந்த கேள்வியை வினோத் ராஜ்கிட்ட கேட்டால், ‘ என் கதை மூலமாக உலகத்தை மாத்த வந்திருக்கேன்’னு சொல்லுவான். ஒரு முறை சிவகார்த்திகேயன் படத்தோட பூஜைலதான் வினோத் ராஜை பார்த்தேன். அப்போ அவன் கூழாங்கல் இயக்குநர்னு சொல்லி என்கிட்ட பேசுனான்.
நான் ‘ ஆமா, இப்போ அந்த படத்தை பத்தி பேசிட்டு இருக்காங்க… எப்போ ரிலீஸாகும்… அடுத்து என்ன’னு கேட்டேன். அவன் ‘நான் அடுத்த படத்தை தொடங்கிட்டேன்’னு சொன்னான். நான் உடனே ‘யார் இசையமைப்பாளர்’னு கேட்டேன். அவன் ‘இசையமைப்பாளரே கிடையாது’னு சொன்னான். இதைப் பத்தி என் உதவி இயக்குநர்கள்கிட்ட திட்டி பேசினேன். அதுக்குப் பிறகு இந்தப் படத்தை பார்த்தேன். என்னை வினோத் ராஜ் செருப்பால அடிச்சிட்டான்.
நான் மாரி செல்வராஜோட ‘வாழை’ படம் பார்த்தேன். அந்த படமும் என்னை தூங்கவிடல. அந்தப் படத்தைப் பத்தி நான் எழுதினேன். அந்த படத்தை பார்த்த பைத்தியம் போறதுக்குள்ள இந்த பேய்யை (கொட்டுக்காளி) பார்த்துட்டேன். என் தாயின் கருவறை இந்தப் படம். பாலாஜி சக்திவேல் இந்த மாதிரியான படத்தை பார்தது இல்லன்னு சொன்னார். நான் இந்த மாதிரியான படத்தை பார்க்கவே போறதில்ல. நான் வினோத் ராஜ் பாதத்துல முத்தமிடுறேன். இதுக்கு முன்னாடி இளையராஜா சார் காலில் முத்தமிட்டிருக்கேன்.” எனப் பேசி கைதட்டல்களால் அரங்கை நிரம்ப செய்தார்.
இதனைத் தொடர்ந்து வந்து பேசிய சூரி, ” `கொட்டுக்காளி’ படத்துக்குக் கிடைக்கிற பாராட்டுகள் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. என் ஆத்தா அப்பன் செஞ்ச புண்ணியம் என்னை பெரிய இயக்குநர்களெல்லாம் இங்க கொண்டு வந்துவிட்டிருக்காங்க. தேனி, பொள்ளாச்சினு சுத்திட்டு இருந்த என்னை வெளிநாடுகளுக்கு இந்தப் படத்தின் மூலமாக கூட்டிட்டு போயிட்டாரு. நான் வெளிநாட்டுல இருக்கும்போது எங்க அம்மா எனக்கு போன் பண்ணினாங்க. ‘நான் வெளிநாட்டுல இருக்கேன். உனக்கு என்ன வேணும்’னு கேட்டேன். எங்க அம்மா ‘முட்டி வலிக்குது கோடாலி தைலம் இருந்த வாங்கிட்டு வாப்பு. வெளில போனா ரோட்டுல பஸ் வருதானு பார்த்து போ’னு சொன்னாங்க. அவங்களுக்கு வெளிநாடு பத்தி தெரிஞ்சது இந்த விஷயங்கள்தான்.” என்றார்.