கள்ளக்குறிச்சியில் சஸ்பெண்ட் ஆன எஸ்.பி.-க்கு மீண்டும் பணி: உயர் நீதிமன்றத்தில் அதிமுக, பாமக எதிர்ப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தாம்பரத்தில் பணியமர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக, பாமக தரப்பில் வாதிடப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக, பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதைத் தவிர வேறு எதுவும் நடப்பதில்லை. உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் இல்லை.

1998-ம் ஆண்டு ஓசூரில் விஷ சாராயம் குடித்து 100 பேர் பலியான வழக்கில் 16 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த சம்பவத்துக்கு பிறகு, காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி, மெத்தனால் எங்கிருந்து வருகிறது? என்பதைக் கண்டறிந்து, தடுத்திருந்தால், தற்போது 68 பேர் இறந்ததை தடுத்திருக்கலாம்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த மாவட்ட எஸ்.பி சமய்சிங் மீனாவுக்கு எதிராக என்ன விசாரணை நடத்தப்பட்டது? அவர் தற்போது தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

காவல் நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்கப்படும் நிலையில், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க தகுதியில்லை. மேலும், மெத்தனால் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வந்திருப்பதாகக் கூறப்படுவதால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும். மேலும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட வேண்டியது அவசியம்,” என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மெத்தனால் எங்கிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அது தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரகசியமானவை. புலன் விசாரணை அதிகாரியின் ரகசிய அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

பாமக வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால், அரிதான வழக்காகக் கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். அரசே காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதிலிருந்து காவல்துறைக்கும் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது தெளிவாகிறது. அதனால் சுதந்திரமான அமைப்பே இந்த வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சமய் சிங் மீனா மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியிருக்கிறது. அவருக்கு எதிரான விசாரணை முடிவுகளை அரசு வெளியிடவில்லை. கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்படுவதால், இதுகுறித்து சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்,” என்று வாதிட்டார். இதையடுத்து அரசுத் தரப்பு பதில் வாதங்களுக்காக விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.