விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8க்கான வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. கமல்ஹாசனுக்குப் பதில் யார் வரப் போகிறார்கள் என்பதை சேனல் தரப்பில் படு சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி தொடர்பான வட்டாரங்களில் துருவிய போது நடிகர் விஜய் சேதுபதி வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கிடைக்கின்றன தகவல்கள்.
இதற்கிடையில் இன்னொருபுறம் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கி விட்டனவாம். சினிமா, டிவி நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா இன்ஃப் ளூயன்சர் எனப் பல தரப்பிலிருந்து சிலரது பெயர்கள் டிக் செய்யப்பட்டு சேனல் தரப்பு அவர்களை அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது. முந்தைய சீசன்களுக்கு முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காதவர்கள், விஜய் டிவியுடன் நெருக்கமான தொடர்புடைய ஆர்ட்டிஸ்ட்டுகள், தவிர நடிகர் அஸ்வின், ஜாக்குலின் முதலானவர்கள் என சோஷியல் மீடியாவில் பல பெயர்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் நம்பத் தகுந்த சோர்ஸ் மூலம் நமக்குக் கிடைத்த தகவலின்படி நடிகர் ‘பாரதி கண்ணம்மா’ அருண் நிகழ்ச்சிக்குக் கிட்டத்தட்ட தேர்வாகியிருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இவரிடம் முதல்கட்டமாக சேனல் தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்களாம். அருணின் முழுப் பெயர் அருண் பிரசாத். ‘மேயாத மான்’ படத்தில் நடித்தவருக்குத் தொடர்ந்து சின்னத்திரை வாய்ப்பு வரவே, ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்தார்.
கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற அர்ச்சனாவும் இவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாகவே டிவி உலகம் கிசுகிசுத்து வந்தது. இருவரும் அதை மறுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அர்ச்சனா ரெகமன்டேஷனில்தான் இந்த வருடம் அருண் நிகழ்ச்சிக்குள் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.