சமீபத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அதில் வரும் 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும், தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாகக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும், தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர்கள் முடித்துக் கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தவிர, விஷாலுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது, நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் துவங்குவதற்கு முன்பாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில், “நாமெல்லாம் ஒருதாய் வயிற்றில் பிறக்க முடியவில்லையே தவிர நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதுபோல இது ஓர் அமைப்பு. எல்லோரும் சேர்ந்துதான் முடிவு எடுக்க வேண்டும். தொழிற்சங்கம் என்பது கூடிப்பேசி முடிவு எடுக்கும் இடம்.. எங்களிடமும் கலந்து பேசியிருக்க வேண்டும்” என்று துணைத் தலைவரான பூச்சி எஸ். முருகன் நம்மிடம் தெரிவித்திருந்தார்.
இப்படியொரு சூழலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அடுத்த மாதம் கூடுகிறது. படப்பிடிப்பு நிறுத்தம், நடிகர்களுக்குக் கட்டுப்பாடு, வரவு செலவு விவகாரம் உள்படப் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்கிடையே நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, இருதரப்பு சங்கங்களும் விரைவில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றன. அந்த பேச்சு வார்த்தை குறித்தும், பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் மேலும் பேசிய பூச்சி எஸ்.முருகன், ”நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் அரங்கில் நடப்பது வழக்கமான ஒன்றுதான். அதன்படி இந்தாண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடக்கிறது. அப்போது வரவு, செலவு கணக்கைத் தாக்கல் செய்வோம். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மூத்த நடிகர்களைக் கௌரவிப்போம். சென்ற ஆண்டில் ரஜினிகாந்த் அவர்களையும், சௌகார் ஜானகி அவர்களையும் கௌரவித்தோம். அதைப் போல இந்தாண்டும் இரண்டு பேர்களைக் கௌரவிக்கிறோம். அதில் ஒருவர் நடிகர் டெல்லி கணேஷ். நேற்று அவரைச் சந்தித்து, பொதுக்குழுவுக்கு அழைப்பும் விடுத்துள்ளோம். தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்படப் பலரும் அவரது இல்லத்திற்குச் சென்றோம்.
அதைப் போல, இன்னொரு பழம்பெரும் நடிகை ஒருவரும் கௌரவிக்கப்பட உள்ளார். அவர் யாரென ஒருசில தினங்களில் முடிவாகிடும். அவர்கள் தவிர நாடகத்துறையிலிருந்து ஐந்து நடிகர்கள், சினிமா துறையிலிருந்து ஐந்து நடிகர்கள் என 10 நடிகர்களுக்குத் தங்கக் காசுகள் வழங்கவிருக்கிறோம். இவைபோக, புதிய தீர்மானங்களும், ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கான திட்டமிடலும் இருக்கும்.
இதற்கிடையே தயாரிப்பாளர்கள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அவர்கள் தரப்பு பிரச்னைகளைக் கடிதமா கொடுத்திருக்கிறார்கள். தனுஷ் விவகாரம் மட்டுமில்லாமல் சினிமா துறையில் அவர்களுக்கு உள்ள கஷ்டங்களைக் களைவதற்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து எங்களது தலைவர் நாசர் அவர்கள் தலைமையில் முடிவு எடுப்போம். இருதரப்பினருக்கான கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. அது வரும் 18ம் தேதி அல்லது 19ம் தேதி என எதாவது ஒன்றில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அனைத்து விஷயங்களுக்கும் இந்தக் கூட்டத்தில் பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு காணப்படும். இப்போது வரை இருதரப்பினரும் நட்புணர்வோடுதான் உள்ளோம்.” என்கிறார் பூச்சி முருகன்.