கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த பின் FORDA டாக்டர்கள் சங்கம் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றது.
FORDA சங்க பிரதிநிதிகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை அவரது இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சந்தித்தனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “நோயாளிகளின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக FORDA சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஒரு குழுவை அமைக்க சுகாதார அமைச்சர் ஒப்புக்கொண்டார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சகம் உறுதியளித்துள்ளது. மனிதகுலத்திற்கு சிறப்பாகச் சேவை செய்வதே எங்களின் இறுதி இலக்கு. மருத்துவர்கள் தங்களை பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். எனவே, வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
FORDA சங்கம் போராட்டத்தை வாபஸ் பெற்றாலும், மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவமனை மற்றும் அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FAIMA) ஆகிய மருத்துவ சங்கங்கள், மருத்துவர்களின் மீதான தாக்குதலை தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். “தற்போதைக்கு, எங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கவில்லை.
எனவே, சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதம் மத்திய அரசு வழங்கும் வரை எங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும். இப்போது வேலைநிறுத்தத்தை கைவிடுவது பெண் மருத்துவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்று அர்த்தம். இந்த இயக்கம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இதே போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும் சாத்தியம் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவுபணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் போராட்டம்: டெல்லியில் எய்ம்ஸ், ஆர்எம்எல் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் போராட்டத்தில் இணைந்திருப்பதால் கடந்த 2 நாட்களாக டெல்லியிலும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு ஸ்தம்பித்துள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை, நாக்பூரில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் சுமார்200 இளம் மருத்துவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங்அரசு மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவர்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இங்கும் அவசர சிகிச்சை தவிர்த்துமற்ற மருத்துவ சேவைகள் முடங்கியுள்ளன. மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.