ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜீரோ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில் இந்திய சாலையில் முதல்முறையாக ஜீரோ FXE எலெக்ட்ரிக் பைக்குகள் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படம் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற FXE மோட்டார் சைக்கிள் ஆனது $12,495 (இந்திய மதிப்பில் ரூபாய் 10.49 லட்சம்) ஆக உள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வரக்கூடிய மாடல் ஆனது பல்வேறு மாறுபாடுகளை கொண்டதாகவும் விலை சற்று குறைவானதாகவும் அமைந்திருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
பெங்களூரு அருகே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரத்தியேகமான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் உள்ளதால் அதன் அருகாமையிலே இந்த பைக் ஆனது சோதனை செய்யப்பட்டு இருக்கின்றது.
அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த மாடலில் 7.2Kwh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 137 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறனுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 169 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகின்றது.
இந்த மாடலில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 46 hp பவர் மற்றும் 108Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.
இதில் 650 வாட்ஸ் சார்ஜர் ஆனது இணைக்கப்பட்டுள்ளது இதில் முழுமையாக சார்ஜ் செய்ய 9.7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில் விரைவு சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்யும் பொழுது இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையான சார்ஜிங் பெற முடியும்.
சஸ்பென்ஷன் சார்ந்த அமைப்பினை பொருத்தவரை முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இதுவும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வழங்கப்பட்டிருக்கின்றது.
பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 320 மில்லி மீட்டர் டிஸ்க் மற்றும் பின்புறத்திலும் 240மிமீ டிஸ்க் பிரேக் ஆனது வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது சுவிட்சபிள் ஆன்/ஆஃப் முறையில் வழங்கப்பட்டிருக்கின்றது. 17 அங்குல வீல் பெற்றுள்ள ஜீரோ FXE மாடலில் முன்புறம் 110/70-17 மற்றும் பின்புறம் 140/70-17 என இரண்டிலும் Pirelli Diablo Rosso II டயர் உள்ளது.
இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும்பொழுது ஜீரோ எலெக்ட்ரிக் பைக்குகளில் பல்வேறு மாற்றங்களை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஏற்படுத்தி விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.