சர்வதேச அரசியல் படிப்புக்காக அண்ணாமலை ஆக.28-ல் லண்டன் பயணம்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் ஆகஸ்ட் 28-ம் தேதி லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதேசமயம், சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் செல்ல இருக்கும் அவர் அதற்கான பணிகளையும் ஒருபுறம் கவனித்து வருகிறார். 3 மாத காலம் லண்டனில் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படிக்க உள்ளர்.

இந்நிலையில், அண்ணாமலை லண்டன் சென்றால், தமிழக பாஜகவில் மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி தற்போது பாஜகவினரிடையே நிலவி வருகிறது. மேலும், இது தொடர்பாக டெல்லி தலைமையும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் செல்கிறார் எனவும், செப்டம்பர் 2-ம் தேதியில் இருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் படிப்பை தொடர உள்ளார் என்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அண்ணாமலை லண்டன் சென்றாலும், அங்கிருந்தபடியே, கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், 2026-ல் சட்டப்பேரவை தேர்தலிலும், அண்ணாமலை தான் தலைவராக தொடர்வார் என்றும், தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.அதேசமயம் கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம் போல, பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கவனித்துக் கொள்வார் என்றும், பாஜகவின் மூத்த நிர்வாகிகள், அண்ணாமலை இல்லாத இந்த 3 மாதங்களில் காணொலி வாயிலாக அவருடன் கலந்து ஆலோசித்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.