வரிசை கட்டிய நிதி நிறுவன மோசடி புகார்கள்… தேவநாதன் யாதவ் கைது பின்னணி!

சென்னை, மயிலாப்பூர் மாடவீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதன் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் இருக்கிறார். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக களம் கண்டார். இந்தச் சூழலில்தான் கடந்த ஏப்ரலில், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், “மயிலாப்பூர், ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட் நிறுவனத்தில் ரூ.525 கோடி காணவில்லையாம். டெபாசிட் செய்தவர்கள் எல்லாம் பதற்றத்தில் இருக்கிறார்கள்” என பற்றவைத்தார்.

மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்

பிறகு அவர், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பெண் ஒருவரின் ஆடியோவையும் வெளியிட்டார். அதில், “என் அம்மாவின் கணக்கை புதுப்பிப்பதற்காக மயிலாப்பூர் ஹிந்து நிதி நிறுவன அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நிறைய பேர் ‘வட்டித்தொகை தருவதில்லை’ என சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். உடனே நானும் கணக்கை முடித்துத் தரும்படி கேட்டேன். அலுவலர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். வட்டித் தொகை கணக்கில் ஏறவில்லை. முதிர்வடைந்த தொகையைக்கூடப் பெற முடியவில்லை. பலருக்கு நிதி நிறுவனம் வழங்கிய செக் பவுன்ஸ் ஆகிவிட்டது” என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்கள், “முதலீடு செய்யும் பணத்துக்கு 10 முதல் 11 சதவிகிதம் வரை வட்டி கொடுக்கிறார்கள் என்பதால்தான் பலரும் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக முறையாக வட்டி தருவதில்லை. அவர்கள் கொடுக்கும் காசோலையிலும் ‘கணக்கில் பணம் இல்லை’ என வந்துவிடுகிறது” என்றனர். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தனர்.

ஆனந்த் சீனிவாசன்

போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டையில் வைத்து தேவநாதன் யாதவை போலீஸார் கைது செய்தனர். பிறகு அவர் அங்கிருந்து சென்னை, அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டார். அவரிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், ‘அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தலைவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்’ என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “சென்னை மைலாப்பூரில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த Mylapore Hindu Permanent Fund Nidhi Limited என்ற நிறுவனத்தின் மீது அடையார், காந்தி நகரை சேர்ந்த பிரசாத் (52) புகார் அளித்தார். அதில் சம்பந்தப்பட்ட நிறுவனம், நிர்வாக இயக்குனர் தேவநாதன் யாதவ், இயக்குனர்களான குனசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன் ஆகியோர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்கள்.

தேவநாதன் யாதவ் கைது

அதை நம்பிய பிரசாந்த் கடந்த 2021 முதல் 2024 வரை உள்ள இடைப்பட்ட நாட்களில் நிறுவனத்தின் உள்ள பல்வேறு திட்டங்களான Fixed Deposit, Recurring Deposit, Schemes and Cumulative schemes போன்றவற்றில் ரூ.46,49,180த்தினை முதலீடு செய்து முதிர்ச்சி அடைந்த பிறகும் பணத்தினை திருப்பித்தரவில்லை என்பதால் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் கடந்த 1872 ஆண்டு முதல் இயங்கிவருகிறது. அதில் தேவநாதன் யாதவ் என்பவர் 2017-ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குனராக நிர்வாகித்துவருகிறார்.

மனுதாரர் கொடுத்த புகாரில் மேற்படி நிறுவனம் பல கவர்ச்சிகரமான திட்டங்களில் Fixed Deposit, Recurring Deposit, Schemes and Cumulative schemes என்ற பெயரில் முதியோர் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறப்பான திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8% முதல் 12% வரை வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து பண முதலீட்டு தொகை முதிர்வு பெற்ற பிறகும் பணத்தினை திரும்பதரவில்லை. மேற்கண்ட நிறுவனம் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று ஏமாற்றியதாக 14/2024u/s 409, 420 r/w 34 ipc, sec.22 of buds act, 2019 and sec.5 of tnpid act, 1997 என்ற பிரிவுகளின் கீழ் Mylapore Hindu Permanent Fund Nidhi Limited, அதன் நிர்வாக இயக்குநர், மற்றும் 4 இயக்கநர்களுக்கு எதிராக 12.08.2024 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் விளக்கம்

உரிய புலன் விசாரனைக்குப் பிறகு காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கைய்யா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 13.08.2024 அன்று தேவநாதன் யாதவ் (WIN TV Chairman) என்பவரை புதுக்கோட்டை மாவட்டத்திலும், இயக்குநர்கள் குனசீலன் (Win TV- Reporter), மகிமைநாதன் (Win TV Senior Camera Man ) என்பவர்களை சென்னையிலும் கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.